Monday, April 29, 2024
Home » தேர்தலை நடத்தும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம்

தேர்தலை நடத்தும் உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம்

சபையில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு

by gayan
October 19, 2023 6:07 am 0 comment

தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

தேர்தலை இரத்து செய்யுமாறு ஆளும் கட்சி போன்று எதிர்க் கட்சியின் சிலரும் எம்மிடம் வேண்டுகோள் விடுத்தனர். பாராளுமன்றத்திலும் இதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இவ்விடயத்தில் உண்மைத் தன்மையுடனேயே செயற்படுவதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன. என்னைப்பற்றி எவரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் அரசாங்கம் உண்மை தன்மையுடனேயே செயற்படுகிறது.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சின் செயலாளர் போதியளவு நிதியை வழங்க முடியாதென தெரிவித்திருந்தார். தனிப்பட்ட ரீதியில் தேர்தலுக்கு செலவிடுவதற்கு நிதி கிடைக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ற வகையில் இதற்கான நிதியை விடுவிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால் தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். சில பகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமலாகும் நிலைமை தொடர்பிலும் அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் நேற்று சபையில் தெரிவித்த கூற்றுக்குப் பதில் அளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

எதிர்க்கட்சித் தலைவர்அவசரமாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பு. பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு கலப்புத் தேர்தல் முறைமை ஒன்றைக் கொண்டு வருவதாக தெரிவித்தே ,மக்கள் ஆணையை நாம் பெற்றோம்.

இது தொடர்பில், எமது அரச தலைவர்கள் பாராளுமன்றத்தில் பல தடவைகள் தெரிவித்திருந்தனர்.

நாம் வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் போதும், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்றத்தில் இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டதாக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை செயற்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை கலப்பு முறையில் நடத்துவது தொடர்பான யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT