Monday, April 29, 2024
Home » பந்துவீச்சில் மாற்றங்களுடன் இலங்கை இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது

பந்துவீச்சில் மாற்றங்களுடன் இலங்கை இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது

by damith
October 10, 2023 6:18 am 0 comment

உலகக் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி அரங்கில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்திடம் வெற்றியீட்டியதோடு இலங்கை தனது முதல் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. எனினும் இந்த இரு அணிகளும் அண்மையில் ஆசிய கிண்ண போட்டியில் சந்தித்தபோது இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இருந்தது.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியபோதும் அதன் துடுப்பாட்ட வரிசை சற்று தடுமாற்றம் கண்டதோடு பந்துவீச்சிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை.

மறுபுறம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் பந்துவீச்சு பலவீனமான நிலையில் இருந்தது. எனினும் தென்னாபிரிக்கா நிர்ணயித்த 429 ஓட்ட இமாலய வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சாதகமான போக்கை பார்க்க முடிந்தது.

குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டம் மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க நீண்ட இடைவெளிக்குப் பின் அரைச் சதம் ஒன்றை பெற்று ஓட்டத்துக்கு திரும்பியுள்ளமை மற்றும் சரித் அசலங்கவின் அரைச்சதம் இலங்கை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இன்றைய போட்டியில் இலங்கை பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார் பதினொரு வீரர்களில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணி புள்ளிகள் இன்றி புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருப்பதோடு அதன் நிகர ஓட்ட விகிதமும் –2.040 என பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றிபெறுவது மாத்திரமன்றி நிகர ஓட்ட விகிதத்தில் முன்னேற்றம் காண்பதும் அவசியமாக உள்ளது.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி அரங்கு துடுப்பாட்டத்திற்கு சாதகமானது என்பதோடு அங்கு இன்னிங்ஸ் ஒன்றின் சராசரி ஓட்டங்கள் 287 ஆக உள்ளது. எனினும் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவக் கூடியதாக உள்ளது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்தபோதும் இந்த ஆடுகளத்தில் இரண்டாவது துடுப்பெடுத்தாடுவது சற்று கடினமானது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT