Monday, April 29, 2024
Home » காசாவில் இஸ்ரேல் இடைவிடாது குண்டு மழை: உயிரிழப்பு 1,100 ஆக அதிகரிப்பு

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது குண்டு மழை: உயிரிழப்பு 1,100 ஆக அதிகரிப்பு

by damith
October 10, 2023 6:18 am 0 comment

காசா மீது இஸ்ரேல் நேற்றைய (09) தினத்திலும் இடைவிடாது வான் தாக்குதல்களை நடத்தியதோடு இஸ்ரேலுக்குள் பல பகுதிகளிலும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலிய துருப்புகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வந்தது. தீவிரமடைந்திருக்கும் இந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100 ஐ தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது.

முற்றுகையில் உள்ள காசா பகுதி மீது செவ்வாய் இரவு மற்றும் திங்கள் அதிகாலையில் 500க்கும் அதிகமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலுக்குள் ஊடுருவி எதிர்பாராத தாக்குதலை நடத்திய ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கெட் குண்டுகளை வீசி, இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்று குறைந்தது 100 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்த நிலையிலேயே போர் உக்கிரம் அடைந்துள்ளது.

காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேலிய பகுதிகளுக்கு தொடர்ந்து போராளிகளை அனுப்பி ஹமாஸ் சண்டையிட்டு வரும் நிலையில் ஏழு தொடக்கம் எட்டு இடங்களில் நேற்றைய தினத்திலும் மோதல் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் காசா எல்லையை ஒட்டி இஸ்ரேல் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான துருப்புகளை குவித்து வைத்துள்ளது. இது காசா மீது தரைவழி தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இதேவேளை காசாவில் “மின்சாரம், உணவு, எரிபொருள் இன்றி” முழுமையான முற்றுகை ஒன்றுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் உத்தரவிட்டுள்ளார்.

காசாவின் வான் பகுதி மற்றும் அதன் கடற்கரைகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அந்தப் பகுதிக்கு எந்த பொருட்களை அனுமதிப்பது மற்றும் எவைகளை வெளியே கொண்டுவருவது என்பது இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

அதேபோன்று காசாவின் எகிப்து எல்லையை எகிப்து கட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசா பகுதியில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் பிரகடனத்தை வெளியிட்டதோடு “நீண்ட மற்றும் கடினமான” போர் ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த பாரிய தாக்குதல் நடவடிக்கை தொடக்கம் 700க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தவிர, 1,200 பேர் காயமடைந்திருப்பதோடு பலரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதில் தெற்கு இஸ்ரேலின் பாலைவனப் பகுதியில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 260 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்று (09) மாலை வரை 493 ஐ தொட்டுள்ளது என்று பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 2,751 பேர் காயமடைந்துள்ளனர். எனினும் இஸ்ரேல் உக்கிரமாகத் தாக்கி வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

காசாவில் 123,538 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. அச்சம், பாதுகாப்பு பற்றிய கவலை மற்றும் தமது வீடுகள் அழிக்கப்பட்டதாலேயே பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் செறிந்து வாழும் காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும் முன்னர் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி அது எச்சரித்திருந்தது.

“காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிகள் கொண்டு 500க்கும் அதிகமான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

“நாம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறோம். காசாவை சூழவுள்ள ஏழு தொடக்கம் எட்டு திறந்த பகுதிகளில் எமது வீரர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான் தாக்குதல்களால் காசாவில் குடியிருப்பு கோபுரங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மத்திய வங்கிக் கட்டடம் ஆகியன தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனினும் காசாவில் உள்ள மக்கள் உறுதியான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். “நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம், இங்கேயே இருப்போம்” என்று 23 வயது முஹமது சாக் அல்லா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். “இது எமது நிலம். எமது நிலத்தை நாம் கைவிடமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் பலஸ்தீனர்கள் காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக பேரணிகைள நடத்தி வருவதோடு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை மோதல் வெடித்தது தொடக்கம் இங்கு 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன ஆதரவாளர்கள் ஈராக், பாகிஸ்தான், அமெரிக்க மற்றும் பல நாடுகளிலும் ஆதரவு பேரணிகளை நடத்தி வருவதோடு ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் யூதக் கோவில்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, மெக்சிகோ, நேபாளம், தாய்லாந்து, உக்ரைன் மற்றும் அமெரிக்க நாட்டு பிரஜைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளும் தமது பிரஜைகளை இஸ்ரேலில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT