Sunday, April 28, 2024
Home » அஸர்பைஜான் நாட்டின் பிடியில் வந்த ‘நகோர்னா – கராபக் குடியரசு’ கலைப்பு

அஸர்பைஜான் நாட்டின் பிடியில் வந்த ‘நகோர்னா – கராபக் குடியரசு’ கலைப்பு

- 50 வீதமான ஆர்மேனியர்கள் வெளியேற்றம்

by Rizwan Segu Mohideen
September 30, 2023 1:34 pm 0 comment

அஸர்பைஜானுக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையே தனி நாடாக இயங்கி வந்த நகோர்னா–கராபக் குடியரசு கலைக்கப்படுவதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பிராந்தியத்தை அஸர்பைஜான் படைகள் அண்மையில் கைப்பற்றியதைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படாத அந்தக் குடியரசு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகோர்னா–கராபக்் குடியரசைக் கலைக்கும் அரசாணையில் ஜனாதிபதி சாம்வெல் ஷாராமான்யன் கையொப்பமிட்டுள்ளார். வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில் குடியரசு கலைக்கப்பட வேண்டும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் திகதிக்குப் பின்னர் நகோர்னா–கராபக்் குடியரசு என்ற ஆட்சியமைப்பே இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அசர்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் பேரில், அந்தப் பிராந்தியத்திலிருந்து இதுவரை 50 வீதத்திற்கும் மேற்பட்ட ஆர்மேனிய பழங்குடியினர் வெளியேறி ஆர்மேனியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியட் ஒன்றியத்தின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மேனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள நகோர்னா–கராபக்்் பிராந்தியம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

ஆர்மேனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்தப் பிராந்தியத்தை அசர்பைஜானின் ஓர் அங்கமாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன. இருந்தாலும், கடந்த 1994ஆம் ஆண்டு போருக்குப் பின் ஆர்மேனியப் படையினரின் ஆதரவுடன் அந்தப் பகுதியை பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின் அந்தப் பிராந்தியத்தில் ஆர்மேனியாவும், அஸர்பைஜானும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தன.

இந்தச் சூழலில், இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இந்தப் போரில் ஆர்மேனியாவையும், நகோர்னா–கராபக்்் பிராந்தியத்தையும் இணைக்கும் ஒரே தரைவழித் தடமான லச்சின் வீதியை அஸர்பைஜான் முற்றுகையிட்டது. அந்த வீதி அஸர்பைஜான் படையினர் பல மாதங்களாக முற்றுகையிட்டது ஆர்மேனியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான பதற்றத்தை மீண்டும் அதிகரித்தது. இந்த முற்றுகையால் நகோர்னா–கராபக் பிராந்தியத்துக்குத் தேவையான எரிபொருள் அத்தியாவசிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், நகோர்னா–கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அந்தப் பகுதியில் அஸர்பைஜான் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனை சமாளிக்க முடியாத ஆர்மேனிய பிரிவினைவாதப் படையினர் போர் நிறுத்தம் மேற்கொண்டு, தங்கள் ஆயுதங்களை அஸர்பைஜான் படையினரிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனர்.

அதையடுத்து, நகோர்னா–கராபக்் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதாக அஸர்பைஜான் அறிவித்தது. இந்தச் சூழலில், கடந்த சுமார் 30 ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் ஆட்சியமைப்பாக இருந்து வந்த நகோர்னா–கராபக்்் குடியரசை வரும் ஜனவரி 1ஆம் திகதி கலைக்க அதன் ஜனாதிபதி சாம்வெல் ஷாராமான்யன் தற்போது அரசாணை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT