Friday, May 10, 2024
Home » அமெரிக்க அரசாங்கம் ‘முடங்கும்’ நெருக்கடி

அமெரிக்க அரசாங்கம் ‘முடங்கும்’ நெருக்கடி

by sachintha
September 29, 2023 6:17 am 0 comment

அமெரிக்க அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் நான்காவது முறையாக பகுதி முடங்கும் ஆபத்து தற்போது தலை எடுத்துள்ளது.

இந்த நெருக்கடி நிலை ஏற்பட இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அதற்குள்ளாக அமெரிக்க பாராளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது.

அதில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட வேண்டும். இதற்கு நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரைதான் கால அவகாசம் உள்ளது.

பல்வேறு அமைப்புகளுக்கும் வரும் நவம்பர் வரை நிதி கிடைக்க வகை செய்யும் ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தின் செனட் சபை நிறைவேற்றி உள்ளது. ஆனால் மக்களவை அதை நிராகரித்துவிட்டது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்தும் நல்லபடி நடக்கவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மத்திய அரசாங்க ஊழியர்கள் முதல் பொருளாதார புள்ளி விபரங்களை வெளியிடுவது, சத்துணவு சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் இதர ஊழியர்கள் வரை அனைவரும் தற்காலிகமாக விடுப்பில் போக வேண்டிய நிலை ஏற்படும்.

பாராளுமன்றத்தின் செனட் சபை 77க்கு 19 என்ற கணக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஒரு சட்டமூலத்தின் மீதான விவாதத்தை ஆதரித்தது.

அந்த சட்டமூலம் அரசாங்கத்திற்கு வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை நிதியை ஒதுக்க வகை செய்யும். உள்நாட்டுப் பேரிடர்களைச் சமாளிக்க சுமார் 6 பில்லியன் டொலர், உக்ரைனுக்கு உதவியாக மேலும் 6 பில்லியன் டொலர் ஒதுக்கவும் அது வழி செய்கிறது.

ஆனால் அதை குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மக்களவை நிராகரித்துவிட்டது.

மெக்சிகோவுடன் கூடிய எல்லை வழியாக அகதிகள் அதிகம் பேர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.

இந்தப் பிரச்சினையைக் கவனித்தால்தான் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதனிடையே, அரசாங்க முடக்கத்திற்கான வாய்ப்புகள், மாணவர் கடன் கொடுக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலை, அதிக வட்டி விகிதம், மோட்டார் வாகன ஊழியர் வேலை நிறுத்த மிரட்டல் எல்லாம் தலைதூக்குவதால் அமெரிக்கப் பொருளாதாரம் சவால்களை எதிர்நோக்குவதாக வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் ஜெராட் பெர்ன்ஸ்டின் புதின்கிழமை (27) பொருளாதார கொள்கைப் பயிலகம் என்ற அமைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கம் முடங்கினால் அது உலக அளவில் நிதிச் சந்தைகளையும் நாட்டின் நிதித் தரநிலையையும் பாதிக்கலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT