Monday, April 29, 2024
Home » பாலியல் குற்றச்சாட்டு: குணதிலக்க குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பு

பாலியல் குற்றச்சாட்டு: குணதிலக்க குற்றமற்றவரென நீதிமன்றம் தீர்ப்பு

- குற்றத்தை நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி தெரிவிப்பு

by sachintha
September 29, 2023 12:04 pm 0 comment

ரி20 உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உடலுறவின்போது ஆணுறையை அகற்றுவதற்கான சந்தர்ப்பம் குணதிலக்கவுக்கு இருக்கவில்லை என்பது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் பொலிஸுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் உண்மையாக இருந்தார் என்று தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி 29 வயதான சிட்னி பெண் உடன் அவரது கிழக்கு புறநகரில் இருக்கும் வீட்டில் உடலுறவில் ஈடுபட்டபோது பெண்ணின் விருப்பத்திற்கு முரணாக திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றியதாகவே 32 வயதான குணதிலக்க மீது குற்றம்சாட்டப்பட்டது. எனினும் இந்தக் குற்றசாட்டை குணதிலக்க மறுத்த நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற நான்கு நாள் வழங்கு விசாரணைக்கு பின்னர் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹுக்கட் நேற்று (28) தீர்ப்பு வழங்கினார்.

இதன்போது குணதிலக்க குற்றமற்றவர் என தீர்ப்பளித்த நீதிபதி கூறியதாவது, “உடலுறவு தொடர்ச்சியாக இடம்பெற்றதன் காரணமாக, குற்றம்சாட்டப்பட்ட வகையில் ஆணுறையை அகற்றுவதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது” என்றார்.

இதில் டென்னி என்று அழைக்கப்பட்ட குணதிலக்க மற்றும் அந்தப் பெண் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி டேடிங் செயலியான டின்டர் மூலம் நட்பாகி இருப்பதோடு இருவரும் வீடியோ அழைப்பு உட்பட இஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் செயலி ஊடாகவும் தொடர்பில் இருந்துள்ளனர்.

இருவரும் ஒபெரா மதுபான விடுதியில் குடித்துவிட்டு பிராங்கிஸ் பிசாவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு பின்னர் படகு மூலம் குற்றம்சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண் கிட்டார் வாசிப்பது மற்றும் பாட்டுப் பாடுவதை குணதிலக்க பதிவு செய்துள்ளார்.

புத்திசாலிப் பெண்”

“பிடிக்கப்பட்ட அந்த வீடியோக்கள் மூலம் அங்கு ஓய்வான, மகிழ்ச்சியான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த உணர்வு ஒன்று இருந்துள்ளது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டும் பெண் புத்திசாலித்தனமாக செயற்படுவதாகவும் ஒரு சாட்சியாகவன்றி “வேண்டுமென்றே தவறான சாட்சியங்களை வழங்குவதற்கான விருப்பத்தால் தூண்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, அந்தப் பெண் குற்றம்சாட்டியவரை சாதகமற்றவராக சித்தரிக்கும் நோக்கமுடையவராக இருந்துள்ளார்” என்றார்.

இரண்டு நாட்கள் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண் குணதிலக்க தம்மை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும் தனது வீட்டுக்கு செல்லும் வழியில் படகில் தனது பின்புறமாக அடித்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோன்று ஓய்வறைக்கு தன்னைத் தள்ளியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் வாதாடிய வழங்கறிஞர் முருகன் தங்கராஜின் குறுக்கு விசாரணையில் தாமே அறைக்குச் செல்ல குணதிலக்கவை அழைத்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதோடு உணர்வை ஏற்படுத்தும் வகையில் மெழுவர்த்தியை ஏற்றியதாகவும் ஒப்புக்கொண்டார்.

நிரூபிக்கத் தவறிய குற்றச்சாட்டு

குணதிலக்க குறைந்தது மூன்று முறை தன்னை மூச்சுத்திணற வைத்ததாக அந்தப் பெண் கூறியதோடு தனது படுக்கையறையில் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் இடம்பெற்ற வலுக்கட்டாயமான உடலுறவின்போது பின்புறமாக அடித்ததாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் உறவு முடிவுற்ற மூன்று தொடக்கம் ஐந்து விநாடிகளில் படுக்கையறை தரையில் ஆணுறை இருப்பதைக் கண்டதாக அந்தப் பெண் வழக்கு விசாரணையில் கூறினார். ஆணுறையை குணதிலக்க அங்கு வீசியதாக குற்றம்சாட்டிய அந்தப் பெண் அதனை அவர் வீசுவதை காணவில்லை என்று குறிப்பிட்டார்.

வழக்குத்தொடுநர் கெப்ரியல் ஸ்டீட்மன் வாதாடியபோது, “அவரது (பெண்ணின்) எதிர்பார்ப்பு மற்றும் விரும்பியதற்கு மாற்றமாக இது இருந்தது” என்று குறிப்பிட்டதோடு, அவரது நடத்தை “அந்த மனநிலையில், அவரது (பெண்ணின்) தெளிவான விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றும் விருப்பத்தை கொண்டதாக இருந்தது” என்றும் தெரிவித்தார்.

எனினும் பிரதிவாதியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முருகன் தங்கராஜ், “உடலுறவின்போது குணதிலக்க ஆணுறையை அகற்றுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை என்றும் அது தொடர்ச்சியான உடலுறவாக இருந்தது என்றும் அந்தப் பெண்ணும் விபரித்திருந்தார்” என்று வாதிட்டார்.

வழக்குத்தொடுநரால் இதனை நிரூபிக்க முடியாமல் போயிருப்பதாகவும் தங்கராஜ் குறிப்பிட்டிருந்தார்.

உண்மை பேசிய குணதிலக்க

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்புவதற்காக இலங்கை அணியினர் நவம்பர் 6 ஆம் திகதி ஹியாட் ரிஜென்சி ஹோட்டலில் இருந்து விமானநிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்னரே குணதிலக்க கைது செய்யப்பட்டார். இதன்போது அவரது ஹோட்டல் அறை பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டது. அங்குள்ள பை ஒன்றில் இருந்து இரு ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன.

“அவரிடம் இரு ஆணுறைகள் இருப்பதைக் கொண்டு அவர் குறித்த சந்தர்ப்பங்களில் ஆணுறை அணிவது உறுதியாகிறது” என்று நீதிமதி தெரிவித்துள்ளார்.

குணதிலக்க பதிவு செய்யப்பட்ட இரண்டரை மணி நேர பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுத்திருந்தார். “எந்த சந்தர்ப்பதிலாவது ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபட்டீர்களா?” என்று பொலிஸார் கேட்டபோது, “இல்லை, இல்லை, இல்லை” என்று குணதிலக்க பதிலளித்தார்.

ஆணுறையுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை என்று அந்தப் பெண்ணிடம் கூறியதை குணதிலக்க ஒப்புக்கொண்டார். அந்தப் பெண்ணே ஆணுறையை எடுத்து வந்ததாக குறிப்பிட்டார்.

“ஆணுறையின்றி செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை” என்று குறிப்பிட்ட குணதிலக்க “நாம் ஆணுறையுடனேயே செய்தோம்” என்றார்.

அந்த விசாரணையில் குணதிலக்கவிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, “உண்மையாக இருப்பதற்கும் பொலிஸாருக்கு உதவுவதற்கும் அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார் என்றே முடிவுக்கு வரவேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“அந்த விசாரணையில் அவர் கூறியவற்றை நிராகரிப்பதற்கு அல்லது நம்பாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் ஆதாரங்களே எதிரானது

குணதிலக்க “மிருகமாக மாறியதாகவும் உண்மையில் மிகப் பயங்கரமான ஒன்று நடந்ததாகவும்” அந்தப் பெண் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆணுறை தொடர்பில் அந்த பெண் நண்பர்களிடம் கூறும்போது, “அவர் அதனை அகற்றினாரா என்பது எனக்குத் தெரியாது” என்று குறிப்பிட்டதோடு “எனக்கு உறுதியாகத் தெரியாது அப்படி உணர்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிபதி கூறியதாவது, “குற்றம்சாட்டுபவரின் ஆதாரங்கள் குற்றம்சாட்டுபவருக்கு ஆதரவாகவன்றி அதனை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது” என்றார்.

அந்தப் பெண் உண்மையானவரல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தங்கராஜ், படகில் இருந்த சிசிடீவி மற்றும் கண்காணிப்பு கெமராவில் இந்த ஜோடி முத்தமிடுவது மற்றும் கட்டிப்பிடிப்பது தெரிகிறது என்றும் அது எனது கட்சிக்காரர் வலுக்கட்டாயமாகவும் கடுமையாகவும் செயற்பட்டதாக அந்தப் பெண் விபரிப்பதற்கு முரணாக இருப்பதாகவும் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குணதிலக்க கைது செய்யப்பட்டதை அடுத்து கிரிக்கெட் ஆடுவதில் இருந்து அவர் இடைநிறுத்தப்பட்டார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான குணதிலக்க இலங்கை அணிக்காக எட்டு டெஸ்ட் போட்டிகள் உட்பட 100க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் ஆடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றபோதும் ஒரு போட்டியில் ஆடிய பின் உபாதை காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னரே இந்த வழக்குத் தொடர்பில் ஊடகங்கள் அதிக அவதானம் செலுத்தியதால் வழக்கு விசாரணை ஒரு நீதிபதியை கொண்டதாக நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனது வருவாயைக் கொண்டு பெற்றொருக்கான உதவிகளை வழங்க வேண்டி இருப்பதாக குணதிலக்க விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கிரிக்கெட் ஆட திட்டமிடும் குணதிலக்க

பாலியல் குற்றச்சாட்டில் நிரபராதியென அறிவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின், தான் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்ப விரும்புவதாகவும் கலங்கத்திற்கு உள்ளான தனது நற்பெயரை கட்டியெழுப்பவுள்ளதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“கடந்த பதினொரு மாதங்களும் எனக்கு கடுமையாக இருந்தன. எனது முகாமையாளர், குறிப்பாக எனது வழக்கறிஞர் முருகன் தங்கராஜுக்கு நான் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

எனது வாழ்வு வழக்கத்திற்கு திரும்பியதை இட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு திரும்பி மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குணதிலக்க குறிப்பிட்டார்.

இதேவேளை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து நிரபராதியாக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீது விதிக்கப்பட்ட தற்காலிக போட்டித் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT