Saturday, April 27, 2024
Home » சுருக்கு வலைகளுக்கான தடை: இரு தரப்பினருடனும் பேசுவது அவசியம்

சுருக்கு வலைகளுக்கான தடை: இரு தரப்பினருடனும் பேசுவது அவசியம்

by damith
September 25, 2023 9:07 am 0 comment

திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள முடிவு, மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து ஆளுநர், உடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முறுகல்நிலை மற்றும் இது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்கருத்து தெரிவித்த அவர்:

சுருக்குவலையைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை, அனுமதிக்கப்படாத சுருக்கு வலை என இரண்டு வலைகள் உள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் உள்ளது.

கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை, வெருகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000 க்கு மேற்பட்ட மீனவர்கள்,சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை மூலமே மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இதைவிடுத்து,சகல சுருக்கு வலைகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார்.இதனால்,திருகோணமலை மாவட்ட சிறுபான்மை மீனவ சமூகங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மீனவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே இங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு குழுக்களையும் அழைத்து இருபக்க நியாயங்களையும் கேட்ட பின்பே தீர்மானத்திற்கு வர வேண்டும்.

கிழக்கு மாகாண ஆளுநர் இரு தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்ததாகத் தெரியவில்லை.

இது குறித்து அவரை நேரில் சந்தித்து விடயத்தை தெளிவு படுத்த முயற்சித்தபோதும், அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருகோணமலை மாவட்ட மீன் தேவைகளில் ஐம்பது வீதமா னவை, சுருக்கு வலை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

சாதாரண மீனவக் குடும்பங்கள் இத் தொழிலேயே தங்கியுள்ளன. எனவே, இரு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து பூரண தகவல்களைப் பெற்ற பின்னரே உரிய நடவடிக்கைகள் எடுப்பதே உரிய தீர்வாக அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT