Sunday, April 28, 2024
Home » பலஸ்தீனர்களுக்கான உரிமை இன்றி மத்திய கிழக்கில் அமைதி இல்லை

பலஸ்தீனர்களுக்கான உரிமை இன்றி மத்திய கிழக்கில் அமைதி இல்லை

ஐ.நா பொதுச் சபையில் அப்பாஸ் வலியுறுத்து

by gayan
September 24, 2023 6:03 am 0 comment

இரு நாட்டு தீர்வு இன்றி மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட முடியாது என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்த சவூதி அரேபியா முயன்றுவரும் நிலையில் அவரது உரை எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

“பலஸ்தீன மக்களின் சட்டரீதியான தேசிய உரிமையை பெறாது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று சிலர் நினைப்பது தவறானதாகும்” என்று ஐ.நா பொதுச் சபையில் அப்பாஸ் வலியுறுத்தினார்.

இதன்போது புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த 87 வயதான அப்பாஸ், பலஸ்தீன நாடு ஒன்றை அமைக்க சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யும்படி ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுக்கு அழைப்பு விடுத்தார்.

நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்ப்பதற்கும் இரு நாட்டுத் தீர்வுக்குமான கடைசி வாய்ப்பாக ஐ.நா மாநாடு ஒன்று அமையும் என்று கூறிய அவர் பிராந்திய மற்றும் ஒட்டுமொத்த உலகினதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்தார்.

சவூதியுடனான உறவை ஏற்படுத்துவது தொடர்பில் அதற்கு மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்திய அடுத்த தினத்திலேயே அப்பாஸின் உரை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவதில் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முஸ்லிம்களின் இரு புனிதத் தலங்களின் பாதுகாவலராக இருக்கும் சவூதி உடன் இஸ்ரேல் உறவை ஏற்படுத்துவது மத்திய கிழக்கில் பெரும் திருப்பமாக அமையும் என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கருதுகின்றன. இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கையை சர்வதேசம் கண்டிக்காதது குறித்து அப்பாஸ் பொதுச் சபையில் கண்டனம் வெளியிட்டபோது இஸ்ரேலிய பிரதிநிதிகள் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

“அதன் இனவாத, பயங்கரவாத குடியேறிகள் தொடர்ந்து எமது மக்கள் மீது மிரட்டல் மற்றும் கொலைகளில் ஈடுபடுவதோடு எமது வீடுகள் மற்றும் சொத்துகளை அழித்து எமது பணம் மற்றும் வளங்களை சூறையாடுகின்றனர்” என்றும் அப்பாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT