Monday, April 29, 2024
Home » சனல் 4 குற்றச்சாட்டை கோட்டாபய மறுப்பு

சனல் 4 குற்றச்சாட்டை கோட்டாபய மறுப்பு

- ராஜபக்ஷர்களுக்கு எதிரான மற்றுமொரு பொய்யான வீடியோவே இது என்கிறார்

by Prashahini
September 7, 2023 4:34 pm 0 comment

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 இன் புதிய ‘டிஸ்பேச்சஸ்’ ஆவணப்படத்தில் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக மறுத்துள்ளார்.

இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2005 இலிருந்து ராஜபக்சக்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ராஜபக்சக்களுக்கு எதிராக குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்கள் என கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் உள்நோக்கம் கொண்ட சில தனிநபர்களால் என்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், நான் அரசாங்கப் பதவியில் இருந்தபோது ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனவே, என்னை ஜனாதிபதியாக்குவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது அபத்தமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கியதிலிருந்து, ஜனாதிபதியாகத் தெரிவாகும் வரை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான சுரேஸ் சலேயுடன் தொடர்பெதனையும் வைத்திருக்கவில்லையெனவும், தற்கொலைக்குண்டுதாரிகளை சுரேஸ் சாலே 2018 பெப்ரவரியில் சந்தித்ததாக தெரிவிக்கப்படும் விடயம், புனையப்பட்ட கதையென்பது தெளிவாகத் தெரிவதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் திட்டத்தைத் தீட்டுவதற்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சனல் 4 அம்பலப்படுத்திய கடுமையான மற்றும் நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இலங்கையில் பல தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை குறிவைத்து 271 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த 2019 பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைப் படத்தை பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பு ஒளிபரப்பிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிக்கை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT