Friday, May 10, 2024
Home » குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்காக விஷேட கலந்துரையாடல்

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்காக விஷேட கலந்துரையாடல்

by Prashahini
July 31, 2023 4:04 pm 0 comment

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் செயற்பட்டு வரும் சிவில் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகளுடனான விஷேட கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (30) அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபள்யூ.எஸ்.ஏ.சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பொலிஸ் உயரதிகாரிகள், சர்வமத தலைவர்கள், சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள், துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள அனைத்து இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையினைக் கட்டியெழுப்பி நிரந்தர சமாதானத்தினை நிலைநாட்டுவதன் அவசியம் குறித்து விஷேட வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியமை குறித்து சுட்டிக் காட்டப்பட்டது.

இதுதவிர, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சுமார் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைத்து செயற்பட வேண்டிய விதம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையினை மக்கள் மத்தியிலிருந்து இல்லாதொழிப்பது தொடர்பிலும், குற்றச் செயல்களை கட்டுப் படுத்துவதற்கான விஷேட நடைமுறைகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நிகழும் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான குற்றச் செயல்கள், களவு கொள்ளைச் சம்பவங்கள், வீட்டு வன்முறைகள் அநீதிகள், இரவு வேளைகளில் தேவையற்ற வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பான விடயங்கள், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடைமுறைகள் போன்றன தொர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இவ்வாறான விடயங்களில் இனிவரும் காலங்களில் சிவில் பாதுகாப்புக் குழுவினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட வேண்டிய விதம் குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.

வீதி விபத்துக்கள், டெங்கு நோய் தாக்கம் போன்றவற்றால் நாளாந்தம் பல்வேறான உயிரிழப்புக்கள் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவற்கு மக்கள் அனைவரும் முன்வர வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து இனத்தவர்கள் மத்தியிலும் பரஸ்பர ஒற்றுமையினை வளர்க்கும் செயற்றிட்டங்களை அமுல்படுத்துவற்கான வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT