Thursday, May 9, 2024
Home » அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண அதிகரிப்பு: அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடல்

அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண அதிகரிப்பு: அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடல்

- நீர் விநியோகத்தில் மாதாந்தம் ரூ. 500 மில்லியன் நஷ்டம்

by Rizwan Segu Mohideen
July 20, 2023 3:18 pm 0 comment

– குறைந்த பாவனையாளர்களுக்கு நாளுக்கு ரூ. 33 செலவு

இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (19) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முகங்கொடுக்க நேர்ந்துள்ள முக்கியமான சவால்களுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தரமான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டே நீர்க்கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். நீர் கட்டண அதிகரிப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்த போது அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீர் உற்பத்திக்கான செலவில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்யும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்நீர் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது என்றும், இதனால் நீர் விநியோகத்திக்கான செலவு அதிகரித்து மாதாந்தம் 500 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக கடன் சுமை, நாணயத் தேய்மானம், வட்டிவீதம் அதிகரித்துள்ளமை நீரை சுத்திகரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்தமை போன்றவையால் மாதாந்தம் சுமார் 2.8 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் இணக்கப்பாடு மற்றும் நிலையான அபிவிருத்தியின் நிமித்தமான எமது முயற்சியின் பிரகாரம் புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் கொள்கையொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பொருளாதார சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரினால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக நாம் அறிவோம். இருந்தபோதும் நீர் விநியோகத்தை பாதுகாப்பதற்கு இது அவசியமானதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமுர்த்தி மற்றும் குடியிருப்பு நீர் பாவனையாளர்கள், குறைந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியுடன் கூடிய மக்களுக்களுக்கான நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என்பதுடன், அவர்களுக்கான மானியங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படுவதால் மேலதிக பொருளாதார தாக்கம் ஏற்படாது.

அது மாத்திரமன்றி முன்மொழியப்பட்டுள்ள நீர் கட்டணத்தை அதிகரிக்குமிடத்து குறைந்தளவு நீரைப் பயன்படுத்தும் நீர் பாவனையாளர்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கும் ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் குறைந்தளவு நீர் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களின் கட்டணம் 1000 ரூபாவுக்குக் குறைவாகக் (நாளொன்றுக்கு 33 ரூபா) காணப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது. இவை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT