Monday, May 20, 2024
Home » நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

by Prashahini
July 18, 2023 3:32 pm 0 comment

– இறைவரிச் சட்டத்தில் திருத்தம்
– மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவி
– புதிய சிறைச்சாலைகள் நிர்வாகச் சட்டமொன்றை அறிமுகம்
– இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 11 முடிவுகள்

நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார அணுகல்களுக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தல், சேவைகளின் தரப்பண்புகளை அதிகரித்தல் மற்றும் நிலைபேறான நீர்வளங்களின் நடைமுறைகளை அமுல்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஆற்றல்கள் மற்றும் நிலைபேற்றுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு குறைந்த வருமானங் கொண்டவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வணக்கத்தலங்கள் மற்றும் பொது நீர் விநியோகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்புக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீர் மற்றும் வடிகாலமைப்புக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்காக விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடித்தல்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இவ்விமான நிலையத்தில் சர்வதேச விமானக் கம்பனிகளால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில் 50% வீதத்தை மாத்திரம் 06 மாதங்களுக்கு அறவிடுவதற்காக 2022.12.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சலுகைக் காலம் 2023.07.11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்ற பயணிகளின் விமானப் பயணச்சீட்டுக்களின் விலையைத் எளிதில் செலுத்தக்கூடியதான விலையைத் தீர்மானிப்பதற்காக விமானமேறல் அறவீட்டு வரியில் 50% வீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கான அனுமதியை வழங்குகின்ற காலப்பகுதியை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. புதிய சிறைச்சாலைகள் நிர்வாகச் சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்
1877 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் மூலம் இலங்கையின் சிறைச்சாலைத் தொகுதி நிர்வகிக்கப்படுவதுடன், குறித்த கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை சமகாலத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை பொறுப்புக் கூறுகின்ற சர்வதேச சட்டங்களுடன் தொடர்புடைய பொறுப்புக்கள் மற்றும் தரப்பண்புகளுக்கமைய இக்கட்டளைச் சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகள் இணங்கியொழுகவில்லை.

அதனால், புதிய சிறைச்சாலை நிர்வாகச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில் முன்னாள் நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட சட்ட மறுசீரமைப்புக் குழு இதற்கான அடிப்படை சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது. அவ்வடிப்படை வரைவாக்கத்தின் பிரகாரம் புதிய சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. ஐரோப்பிய மன்றத்தின் நிதியொதுக்கீட்டின் மூலம் நிதியிடலுக்காக உத்தேச உணவுத் துறையில் சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கருத்திட்டம்
ஐரோப்பிய மன்றத்தின் இலங்கைக்கான மூலோபாய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள “இலங்கைக்கான பல ஆண்டு அளவுகோல் நிகழ்ச்சித்திட்டம் 2021 – 2027” இன் மூலம் 2021-2024 காலப்பகுதிக்காக 60 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியொதுக்கீட்டின் 15 மில்லியன் யூரோக்களைப் பயன்படுத்தி “உணவுத் துறையில் சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கருத்திட்டம்” எனும் பெயரிலான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

உணவு நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தாங்குதிறன்களை விருத்தி செய்து உணவுத் துறையில் சுழற்சிமுறைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

வினைத்திறனான உணவு விநியோக வழிகள்ஃமுறைகளைப் பயன்படுத்துவதற்கும், உணவு வீண்விரயத்தைக் குறைப்பதன் மூலம் இடர்களுக்கு ஆளாகக்கூடிய நபர்களின் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், உணவுக் கழிவுகளை சேதனப் பசளை மற்றும் விலங்குணவுகள் போன்ற பயன்பாட்டுத்திறனுடைய உள்ளீடுகளாக மாற்றுவதற்காகவும் இக்கருத்திட்டம் ஒத்துழைப்பு வழங்குகின்றது.

அதற்கமைய, உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய மன்றத்துடன் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்தத் தொடர்புகளை வலுப்படுத்தும் கருத்திட்டம்
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்தத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 15 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டின் கீழ் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கிடையில் 2022.03.28 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பௌத்த விகாரைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு சூரிய மின்கல வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்வதற்கு இருநாடுகளும் உடன்பாடு தெரிவித்துள்ளன.

அதற்கமைய, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொண்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. இலங்கை உலகளாவிய உயிர் எரிபொருள் கூட்டணியின் ஆரம்ப உறுப்பினராதல்
இந்தியா G20 அமைப்பில் தலைமைத்துவம் ஏற்று செயற்படுகின்ற காலப்பகுதியில் உலகளாவிய உயிர் எரிபொருள் கூட்டணியை நிறுவுவதற்கான படிமுறைகளை மேற்கொள்வதாக 2023 பெப்ரவரி மாதம்; இடம்பெற்ற இந்தியாவின் வலுசக்தி வாரத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னணி உயிர் எரிபொருள் உற்பத்தியாளர்களும், நுகர்வோருமாகிய பிறேசில், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் மற்றும் ஏனைய ஆர்வம் காட்டுகின்ற நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கும், வலுசக்தித் துறையில் குறிப்பாக போக்குவரத்தின் போது நிலைபேறான உயிர் எரிபொருள் பாவனையை ஊக்குவிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள கூட்டணியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், உலகளாவிய உயிர் எரிபொருள் வர்த்தகத்திற்கு வசதியளித்தல், உயரிய கொள்கை வகுப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காக சிறந்த நடைமுறைகளைப் பரிமமாறிக் கொள்ளல் மற்றும் உலகில் விரிவான தேசிய உயிர் எரிபொருள் பாவனைக்கான தொழிநுட்ப வசதிகளை வழங்குவதன் மூலம் சந்தைப்படுத்தலை அபிவிருத்தி செய்தல் மற்றும் வலுப்படுத்தல் மூலம் முன்மொழியப்பட்டுள்ள கூட்டணியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த புதிய கூட்டணியில் இணைந்து கொள்வதற்காக இந்தியா அனைத்து அரசுகளிடம் எதிர்பார்ப்பதுடன், அதன் ஆரம்ப உறுப்பினராக இணைவதற்கு அடிப்படை ஆவணத்தில் கையொப்பமிடுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை உலகளாவிய உயிர் எரிபொருள் கூட்டணியின் ஆரம்ப உறுப்பினராவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. நேபாளத்தின் கத்மண்டு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்கல்
கத்மண்டு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களுக்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தம் 2023.08.31 அன்று முடிவடைகின்றது. விமானங்களுக்கான புதிய எரிபொருள் விநியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பெறுகை முறையின் கீழ் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக ஒரு போட்டி விலைமுறி மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தின் விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களைக் கொண்ட ஒரேயொரு விலைமனுதாரரான Associated Energy Group LLC இற்கு 02 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானப் பயணிகள் மற்றும் நடமாடும் விமான மின்னுயர்த்தியை இயக்குகின்ற சேவைக்கான ஒப்பந்தத்தை வழங்கல்
இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானப் பயணிகள் மற்றும் நடமாடும் விமான மின்னுயர்த்தியை இயக்குவதற்கான தரையிறக்கச் சேவைகளுக்கான ஒப்பந்தம் 2023.10.31 அன்று முடிவடையவுள்ளது.

குறித்த சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக மூன்று போட்டி விலைமுறைகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை Bird Airport Services (Chennai) Pvt Ltd இற்கு 03 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம் 2023
ஜப்பான் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 04 ஆவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் (ஏறத்தாழ 611 மில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் அரசுடன் பரிமாற்றுக் கடிதத்தில் கையொப்பமிடுவதற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டுக் கடற்கலன்கள் மற்றும் வெளிநாட்டு அரச அல்லது இராணுவ விமானங்களுக்கான இராஜதந்திர அனுமதியை வழங்குவதற்காக தரநியமமான செயற்பாட்டு நடவடிக்கை முறையை அறிமுகப்படுத்தல்
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக வெளிநாட்டு கடற்கலன்கள் மற்றும் வெளிநாட்டு அரச அல்லது இராணுவ விமானங்கள் இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகை தருகின்றன.

அத்தோடு அரசுகள் ஆற்றல்மிக்க சர்வதேச நிறுவனங்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயம் மற்றும் இலங்கையின் கடலடிக் கண்டப்பகுதியில் சமுத்திரவியல் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன. அந்நிலைமையின் கீழ் குறித்த பணிகளுக்கான இராஜதந்திர அனுமதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தரநியமமான செயற்பாட்டு நடவடிக்கை முறையைத் தயாரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்துத் தரப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து தயாரிக்கப்பட்டுள்ள தரநியமமான செயற்பாட்டு நடவடிக்கை முறை பதில் வெளிவிவகார அமைச்சர் அவர்களால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

11. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்
உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கு வசதியளித்தலுக்காக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், ஓய்வூதிய நிதியம் அல்லது பணிக்கொடை நிதியம் மற்றும் அதனை ஒத்த நிதியங்களால் திறைசேரி பிணைமுறிகளில் ஈட்டப்பட்ட வருமானத்தின் மீதான வரி வீதத்தை மாற்றுவதற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2023.06.28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT