ரமழானில் சமய மற்றும் இதர நடவடிக்கை தொடர்பில் சுகாதார வழிகாட்டல்

ரமழானில் சமய மற்றும் இதர நடவடிக்கை தொடர்பில் சுகாதார வழிகாட்டல்-Preventive Measured During Ramazan Season Prayers & Other Religious Activities

- ஒரு மீற்றர் இடைவெளியில் உச்சபட்சம் 100 பேருக்கு தொழ அனுமதி
- பள்ளிகளில் கஞ்சி விநியோகத்திற்கு அனுமதி இல்லை

ரமழான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் சமய அனுஷ்டானங்கள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வது தொடர்பான, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் குறித்த வழிகாட்டல்கள் அடங்கிய DGHS/COVID-19/347/2021 எனும் இலக்கமுடைய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ரமழான் காலத்தில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் கஞ்சி விநியோகிக்கப்படக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மாத்திரம் தொழுகைக்காக அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பள்ளிவாசல்களில் ஒரு தடவையில், குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியில்  100 பேருக்கு மாத்திரம் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பள்ளிவாசல்கள் அதன் அளவிலும் பார்க்க அதிகமானோர் ஒன்றுகூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வுழூ செய்யும் பகுதி மூடப்பட்டிருக்கும் என்பதால், வீடுகளிலிருந்து வுழூ செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தமது தொழுகைக்கான விரிப்பை (முஸல்லா) கொண்டு வர வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் உரிய முறையில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நுழைவாயிலில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களினுள் பல்வேறு இடங்களிலும் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நீக்கிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்தல் உள்ளிட்ட மற்றொருவரை தொடும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது கையடக்கத் தொலைபேசிகள், பேனாக்களை ஒருவருக்கொருவர் பகிர்வதை மேற்கொள்ளாதிருக்குமாறும், குர்ஆன் உள்ளிட்ட நூல்களை தொடும் முன்னரும் பின்னரும் கைகளை கிருமிநீக்கம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களின் உள்ளேயோ, வெளியேயோ எவ்விதமான உணவுகளோ, பானங்களோ வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வகையில் காற்றோட்டம் மிக்கதாக பள்ளிவாசல்கள் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைகளால் தொடாத வகையிலான (கால்களால் இயங்கும்) கழிவுத் தொட்டிகளை வைத்திருப்பதோடு, தொடர்ச்சியாக அதிலுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழிவறைகளில் கைகளைக் கழுவுவதற்காக, உரிய வகையிலான நீர் விநியோகம், திரவ வகையிலான சவர்க்காரம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கழிவறையினை சுத்தமாக வைத்திருக்கும் வகையில் அதனை சுத்தமாக்க ஒரு பணியாளை வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் தொழுகையில் பங்குபற்றக் கூடாது என்பதோடு, கொவிட்-19 அறிகுறிகளான, காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை நோவு, சுவாசிப்பதில் சிக்கல் காணப்படுமாயின் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழுகையின் பின்னரும், சவர்க்கார நீரினால் அல்லது 0.1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலினால் அல்லது பொதுப் பாவனைக்கான சலவைத் தூள் மூலம் தரைகளை சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பொதுச் சுகாதார பரிசோதகர் மூலம், இந்நடவடிக்கைகள் தொடர்பில் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியினால் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...