சுகாதார அறிவுறுத்தல்களை உரியவாறு பேணுவதே ஆபத்தைத் தவிர்க்கும் வழி | தினகரன்

சுகாதார அறிவுறுத்தல்களை உரியவாறு பேணுவதே ஆபத்தைத் தவிர்க்கும் வழி

அலட்சியம் கூடாது!

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டதையடுத்து நாடு முழுவதும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் பயங்கரத்திலிருந்து ஒவ்வொருவரும் தன்னையும் மற்றையோரையும் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

இலங்கையில் கொவிட் 19 அலையின் தாக்கம் மீண்டும் ஆரம்பித்திருப்பதால் அரசும், சுகாதாரத்துறையினரும் நாட்டு மக்களிடமிருந்து எதிர்பார்க்கும் சுகாதார, பாதுகாப்பு விடயங்களில் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது. மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தொடர்பில் நாட்டு மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் அவ்வப்போது பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விடயம் தொடர்பில் பலர் நடந்து கொள்ளும் விதம் கவலை கொள்ளச் செய்கின்றது. அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் வழங்கும் அறிவித்தல், அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவர்கள் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.

சுகாதார நடைமுறைக்கு அமைவாக முகக்கவசம் அணிதல், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி பேணுதல், முறையாக கைகளைக் கழுவிக் கொள்ளுதல், தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நமது பாதுகாப்பிற்கும், சமூகத்திலுள்ள ஏனையவர்களது பாதுகாப்பிற்கும் உத்தரவாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஐரோப்பிய நாடுகளில் கொவிட் 19 இரண்டாவது அலையினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களும், பொருளாதார நெருக்கடிகளும் எதிர்பார்த்திராத அளவுக்கு பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், இந்நாடுகள் தற்பொழுது இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் கணிசமான கொவிட் 19 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இறப்பு வீதம் கணிசமானளவு குறைவடைந்துள்ளது எனலாம்.

கொவிட் 19 வைரஸுடனான கடந்த 9 மாத கால அனுபவத்திலிருந்து மருத்துவ உலகம் பல விடயங்களை புதிதாக அறிந்து கொண்டுள்ளது. கொவிட் 19 வைரஸினால் ஏற்படக் கூடிய நோய்த் தாக்கங்கள், அதன் பாரதூரமான விளைவுகள் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளன.

கொரோனாவின் சமூக பரம்பல் அதிகரிக்கின்ற பொழுது நிலைமைகள் மாறுபடும். ஒருவருக்கு தொற்றக் கூடிய வைரஸின் அளவைக் கட்டுப்படுத்த முடியாது போகும். சமூகப் பரம்பல் அதிகரிக்கின்ற பொழுது ஒரவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றுகின்ற Virus Load அளவும் அதிகரிக்கும். அது மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்ற நோய்த் தாக்கங்களும் அதிகரிக்கும். வைத்தியசாலைகள் நிரம்பி வழியும். இறுதியில் அதிகரித்த மரணங்கள் எற்படலாம். மேற்கு நாடுகள் இவ்வாறான நெருக்கடியைச் சந்தித்தன.

இவ்வாறான ஆபத்தான நிலைமை ஏற்படுவதிலிருந்து எங்களையும், எங்களது குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்குமுள்ள தலையாய கடமையாகும். குறிப்பாக, மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கொவிட் 19 தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் ஓரிரு மணித்தியபலங்களில் மிக விரைவாகப் பரவி விடும் அபாயம் காணப்படுகின்றது. அதன் காரணத்தினாலேயே இந்நோய் தொடர்பில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயலில் பொதுமக்களுக்கு விளக்கமளித்த அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவரும், அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன் கூறுகையில், ஐவேளை தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வருகை தரும் பொதுமக்கள் மிகவும் அவதானம், விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு நிறைவான ஒத்துழைப்பு நல்க வேண்டும். எம்மையும், ஏனையவர்களையும் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொவிட் 19 தொடர்பில் அரசாங்கம், சுகாதாரத்துறை, இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பன அவ்வப்போது வழங்கும் அறிவுரைகள், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றி பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருக்கு நிறைவான ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

பள்ளிவாயல்களில்; தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு நிபந்தனைகள், மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில்; இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன எழுத்து மூலம் தெளிவாக வலியுறுத்திள்ளன. இதில் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள்; தொடர்பிலும், பொதுமக்கள் தினசரி கடைப்பிடிக்;க வேண்டிய ஒழுங்குமுறைகள் தொடர்பிலும் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்;ளது.

கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளும் மக்கள் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாயல்களுக்கு தொழுகைக்காக வருகை தரும் பொதுமக்கள் வீட்டிலயே 'வுழு' செய்து கொண்டு வருகை தருவதுடன், கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதுடன், தொழுகை விரிப்பொன்றையும் வீட்டிலிருந்து கொண்டு வருதல் வேண்டும். சமூக இடைவெளி பேணும் நோக்கில் பள்ளிவாயலில் அடையாளமிடப்பட்டுள்ள இடத்தில் தொழுகைக்காக அமர்ந்து கொள்ளுதல் வேண்டும். இந்நடைமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஐவேளைத் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வயோதிபர்கள், சிறுவர்கள் வருகை தர வேண்டியதில்லை. அத்துடன் வாகனத்தில் வருகை தருவதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளவும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 நடைமுறைகளை ஜமாஅத்தினர்; அவசியம் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும். தவறினால் நாங்கள் மாத்திரமன்றி முழு ஊரும், மொத்த நாடும் தவிக்க நேரிடும்.

அரசாங்கம், சுகாதாரத் துறையினர், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்றி எம்மையும், ஏனையவர்களையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்விடயங்களில் யாரும் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்காது அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)


Add new comment

Or log in with...