ரவி, அலோசியஸ் உள்ளிட்டோருக்கு பயணத் தடை; பிடியாணை முடிவு மார்ச் 06 இல்

ரவி, அலோசியஸ் உள்ளிட்டோருக்கு பயணத் தடை; பிடியாணை முடிவு மார்ச் 06 இல்-Travel Ban for 12 Including Ravi-Aloysius

பிணை முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பிடியாணை பெறுமாறு அறிவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 12 பேரை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு, பதில் பொலிஸ் மாஅதிபருக்கு சட்ட மாஅதிபர் நேற்று (03) பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய, இன்றையதினம் (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவர்களுக்கு வெளிநாடு செல்வது தொடர்பில் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களை கைது செய்யும் பிடியாணை பெறுவது தொடர்பான முடிவு நாளைமறுதினம் (06) வழங்கப்படும் எனவும் நீதவான் இதன்போது அறிவித்தார்.

குறித்த சந்தேகநபர்கள் மீது பிணை முறி கொடுக்கல் வாங்கலில் சதி செய்தமை, குற்றவியல் முறைகேடு, மோசடி மற்றும் தமக்கேற்றாற்போல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...