அகில தனஞ்சயவின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் நியூசிலாந்து ஸ்திரம் | தினகரன்


அகில தனஞ்சயவின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் நியூசிலாந்து ஸ்திரம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தேநீர் இடைவேளையின் பின்னர் போட்டியில் மழைக்குறுக்கிட்ட நிலையில், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யத் தொடங்கியதில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கின. இதில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துக்கொண்டது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மதிக்கத்தக்க ஆரம்பத்தை பெற்றது. ஜீட் ராவல் மற்றும் டொம் லேத்தம் ஆகியோருக்கு இடையில் முதல் விக்கெட்டுக்காக 64 ஓட்டங்கள் பகிரப்பட்டது. எவ்வாறாயினும், ஐ.சி.சியின் தடைக்கு பின்னர், முதல் தடவையாக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய அகில தனஞ்சய டொம் லேத்தமின் (30) விக்கெட்டினை கைப்பற்றினார்.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், அகில தனஞ்சயவின் அதே ஓவரில் ஓட்டங்கள் இன்றி வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார். தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்த அகில தனஞ்சய குறுகிய இடைவேளையில் ஜீட் ராவலின் (33) விக்கெட்டை கைப்பற்ற, நியூசிலாந்து அணி மதியபோசன இடைவேளையின் போது 71 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஆனால், மதியபோசன இடைவேளையின் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இதில், ரொஸ் டெய்லர் தன்னுடைய 31ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை கடந்தார்.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் டெய்லர் மற்றும் நிக்கோலஸ் ஜோடி 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த போதும், தேநீர் இடைவேளை நெருங்கிய சந்தர்ப்பத்தில் ஹென்ரி நிக்கோலஸ் 42 ஓட்டங்களுடன் அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அகில தனஞ்சய தன்னுடைய அடுத்த ஓவரில் பிஜே வெட்லிங்கின் விக்கெட்டினை கைப்பற்ற நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது 179 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் அகில தனஞ்சய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 4ஆவது 5 விக்கெட் பிரதியை பதிவு செய்தார். பின்னர், ஆரம்பித்த இந்தப் போட்டியில் மிக விரைவாக ஓட்டங்களை நியூசிலாந்து அணி குவித்து 200 ஓட்டங்களை கடந்த போதும் போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆட்டநேர முடிவில் ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், இலங்கை அணி சார்பாக அகில தனஞ்சய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.


Add new comment

Or log in with...