Thursday, May 2, 2024
Home » ஐ.ம.ச. உடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க

ஐ.ம.ச. உடன் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க

- கட்சியின் பொதுக் கொள்கைகள் பற்றிய சிரேஷ்ட ஆலோசகராக நியமனம்

by Rizwan Segu Mohideen
January 29, 2024 4:48 pm 0 comment

இலங்கை இராணுவத்தின் 20ஆவது தளபதியுமான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமித்தார்.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான இவர் 35 வருடங்களுக்கும் மேலாக (1980-2015) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு தலைமை தாங்கி செயற்பட்டதோடு,எல்.ரி.ரி.ஈ இனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு  உத்வேகத்தை வழங்கியதாக கருதப்படும் நான்காம் கட்ட ஈழப்போரில் கிழக்கில் இடம்பெற்ற மிகப்பெரும் இராணுவ நடவடிக்கைகக்கு முன்னிலை வகித்திருந்தார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1980 இல் கடெற் பிரிவிலும் பங்காற்றி தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இலங்கை இராணுவ அகாடமியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் 1981 இல் இலங்கை காலாட்படையின் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் கமாண்டோ அதிகாரிகள் பாடப்பிரிவில் காலாட்படை இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் படையணிக்கான ஆயுத ஒத்துழைப்பு கற்கைநெறியை நிறைவு செய்தார்.

1993 ஜனவரி முதல் 1996 ஜனவரி வரை,தயா ரத்நாயக்க இலங்கை காலாட்படையின் 6 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.பின்னர் பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள்,கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பட்டம் பெற்றார். மேலும் அவர் சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும்,ஐக்கிய அமெரிக்க இராணுவ புலனாய்வு கல்லூரியிலும்,ஐக்கிய இராச்சியத்தின் கிரான் பீல்ட் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலுள்ள ஹவாய், ஹொனலுலு பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தில் உயர் தகவல் தொடர்பாடல் பாடநெறி உட்பட பல பாடநெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.

6 ஆவது படைப்பிரிவு, இலங்கை காலாட்படை படைப்பிரிவு ரெஜிமென்டுக்கு கட்டளையிடும் அதிகாரியாக பணியாற்றியுள்ளதோடு, கிழக்கு மாகாணத்தின் 23 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதியாகவும் பணியாற்றினார். மனிதாபிமான நடவடிக்கைகளின்போது மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க எல்.ரி.ரி.ஈ இனரை எதிர்பாராத தருணத்தில் வீழ்த்துவதற்கு காரணமாக அமைந்த தொப்பிகல மற்றும் வாகரை உள்ளிட்ட முக்கிய மூலோபாயப் பிரதேசங்களை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான கட்டளைப் பதவிகள் அனைத்தையும் வகித்தமை சிறப்பம்சமாகும்.

புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகமாக 12,000 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்காகவும் பணியாற்றினார்.

இலங்கை இராணுவ அகாடமியின் கட்டளைத் தளபதி,ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளர் போன்ற பதவிகளை அவர் வகித்தமை அவரை தனித்துவம் மிக்க அதிகாரியாக காட்டியது.

யுத்தத்திற்கு பிறகு,மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க 2013 ஓகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். லெப்டினன் ஜெனராகவும் பதவியுயர்த்தப்பட்ட அவர், ஓய்வு பெற்றதும் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். தயா ரத்நாயக்க நாட்டின் அதிக கௌரவங்களைப் பெற்ற இராணுவ அதிகாரிகளுள் ஒருவராவார்.

இராணுவத்தில் பணியாற்றிய போது யுத்தத்தில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது வீரதீரச் செயல்களை கௌரவித்து, வீர விக்ரம விபூஷண, ரண விக்ரம பதக்கம், ரண ஷூர பதக்கம், உத்தம சேவா பதக்கம், தேச புத்ர பதக்கம் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT