மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த உதைபந்தாட்டம் | தினகரன்

மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த உதைபந்தாட்டம்

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்காக நடத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமையும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 32 உதைபந்தாட்ட அணிகளுக்கு மாத்திரமே இச் சுற்றுப்போட்டியில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ஆதில் பாக்கீர் மாக்கார் வெற்றிக் கிண்ணத்துடன் 50,000 ரூபா பரிசுப் பணமும் வழங்கப்படும். அத்தோடு இறுதிப் போட்டியில் பங்குபற்றி தோல்வியுறும் அணிக்கு கிண்ணத்துடன் 30,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்படும் என ஏற்பாட்டுக்குழு சார்பில் முஹம்மத் பஸான் தெரிவித்தார்.

இறுதிப்போட்டி 31 ஆம் திகதி பி.ப. 4.30 மணிக்கு அதே விளையாட்டரங்கில் இடம்பெறுவதுடன் பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல், பேருவளை நகர பிதா மஸாஹிம் முஹம்மத், உப தலைவர் முனவ்வர் ரபாய்தீன், எதிர்க் கட்சித் தலைவர் ஹஸன் பாஸி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம். அம்ஜாத், முன்னாள் நகர பிதா மர்ஜான் பளீல், மில்பர் கபூர், பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம். பதியுத்தீன், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவர் இக்பால் சம்ஸுதீன் உட்பட உறுப்பினர்கள் பலரும் விழாவில் பங்குபற்றுவர்.

முன்னணியின் விளையாட்டுக் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. போட்டியில் பங்குபற்ற விரும்பும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த உதைபந்தாட்ட அணிகள் 0773986747, 0777767737, 0714803667 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் 29 ஆம் திகதிக்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

(பேருவளை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...