Saturday, May 4, 2024
Home » இலங்கை தமிழ்ப் பத்திரிகைத்துறையில் ஆளுமை மிகுந்தவர் அமரர் சிவநாயகம்

இலங்கை தமிழ்ப் பத்திரிகைத்துறையில் ஆளுமை மிகுந்தவர் அமரர் சிவநாயகம்

by damith
April 22, 2024 12:34 pm 0 comment

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைத்துறையில் மிகுந்த ஆளுமைமிக்கவராக விளங்கிய அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் 24 ஆவது சிரார்த்த தினம் இன்று (22.04.2024) அனுஷ்டிக்கப்படுகிறது.

02.07.2021இல் திருகோணமலையில் பிறந்தவர் சிவநாயகம். அவரது துணைவியாரான மங்களவதி மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர்.

சிவநாயகம் 1946 ஆம் ஆண்டில் கூட்டுறவு சமாஜம் வெளியிட்ட ‘ஐக்கிய தீபம்’ எனும் சிற்றிதழின் (சஞ்சிகை) கிழக்கு மாகாண ஆசிரியராக தனது 25ஆவது வயதில் எழுத்துலகில் கால்பதித்தார். 1947 ஆம் ஆண்டில் இவர் ‘உதயம்’ எனும் சிற்றிதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராக திகழ்ந்தார். 1948 ஆம் ஆண்டில் தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியராக இணைந்தார்.

அதன் பின்னர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அழைப்புக்கிணங்க, 1950 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ‘சுதந்திரன்’ வார இதழின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பை ஏற்று, அதனை திறம்பட நடத்தினார். 1960ஆம் ஆண்டில் வீரகேசரி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1965 ஆம் ஆண்டு வரை சுமார் 5 ஆண்டுகள் அவர் வீரகேசரியில் பணியாற்றியிருந்தார்.

அதன் பிறகு சுயாதீன பத்திரிகை சமாஜத்தில் இணைந்து, ‘தினபதி’ எனும் நாளிதழையும் ‘சிந்தாமணி’ எனும் வாரஇதழையும் புதிதாக உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசிரியராக இறுதிவரை (1966_-1990) அதாவது அந்த ஸ்தாபனம் மூடப்பட்டகாலம் வரை பணியாற்றினார். தினபதி மற்றும் சிந்தாமணி பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தியமைக்காக சிவநாயகத்தை அப்பத்திரிகை நிறுவனம் பணிப்பாளர்களில் ஒருவராக நியமித்தது.

அவ்வாறே, சிவநாயகத்தின் பிறந்ததின நூற்றாண்டை (1921_ -2021) முன்னிட்டு, இலங்கை அரசு நினைவு முத்திரை வெளியிட்டு அன்னாரை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தியது. இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு தேசிய ரீதியில் கிடைக்கப் பெற்ற மிக உயர்ந்த கௌரவம் இது எனலாம்.

சிந்தாமணி பத்திரிகை மூலம் தமிழ் இலக்கியத்துறைக்கும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் ஆசிரியர் சிவநாயகம் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இலங்கைக்கு (கணினி மூலம்) அறிமுகமாவதற்கு முன்னரே, அதனை சிந்தாமணி இதழின் ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக முதல் முதலில் அறிமுகப்படுத்தி, இலங்கை வாசகர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் அவர்.

சிவநாயகம், சாயிபாபா ஆன்மீக ஸ்தாபத்தின் ஊடாக, சமய சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தவராவார். கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையம் உருவாக்கப்பட்ட போது, அதன் ஸ்தாபக தலைவராக ஏகமனதாக தெரிவாகிய சிவநாயகம், 25 ஆண்டுகள் தொடர்ந்து அதே சாயி ஸ்தாபானத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவாகி வந்தார்.

1979ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சட்ட முறைமைகளுக்கு அமைவாக சத்ய சாயி பாபா (இலங்கை) அறக்கட்டளையகம் எனும் சாயி அமைப்பையும் சிவநாயகம் உருவாக்கினார். இலங்கையில் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட சாயி அறங்காவலர் சபை இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா இராஜஜோதி பொதுச்செயலாளர், சாயிபாபா (கொழும்பு) மத்திய நிலையம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT