மோடிக்கு எதிராக ஜப்பானுக்கு கடிதம் | தினகரன்

மோடிக்கு எதிராக ஜப்பானுக்கு கடிதம்

மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

மத்திய பாஜக அரசு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முனைந்து வருகிறது.

ஆதார், தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, யோகா ஆகியவை இந்த அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு புல்லட் ரயில் திட்டமும் முக்கியம்.

இந்த திட்டம் ஜப்பானுக்கு உதவும், இதை முடிக்க முடியாது, இதனால் வருமானம் கிடையாது என்று பல சர்ச்சைகள் இதை சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன.

இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1120 ஏக்கர் நிலம் தனியாருடையது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலருடைய நிலம் ஏற்கனவே இதற்காக வாங்கப்பட்டுவிட்டது.

இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். 1000 குஜராத் விவசாயிகள் கூட்டாக இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயம் இந்த திட்டத்திற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் நிலம் முறையின்றி பறிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மோடியின் கோட்டையான குஜராத்திலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது பாஜகவை அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளது.


Add new comment

Or log in with...