Saturday, April 27, 2024
Home » இளையோர் உலகக் கிண்ணம் இலங்கையில் இருந்து மாற்றம்

இளையோர் உலகக் கிண்ணம் இலங்கையில் இருந்து மாற்றம்

தென்னாபிரிக்காவில் நடத்த ஐ.சி.சி முடிவு

by mahesh
November 22, 2023 6:00 am 0 comment

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் (ஐ.சி.சி) தீர்மானித்துள்ளது. அஹமதாபாத்தில் நேற்று (21) நடைபெற்ற ஐ.சி.சி சபை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இளையோர் உலகக் கிண்ணத்தை நடத்துவதில் இலங்கை கிரிக்கெட்டுக்கு நிர்வாக ரீதியில் நிச்சமற்ற சூழல் இருப்பதாக ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது. அதில் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவதற்கு ஐ.சி.சி எடுத்த தீர்மானத்தை உறுதி செய்வதற்கு விரிவான ஆலோசனைக்கு பின் இந்த சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அணியுடன் தொடர்புபட்ட கிரிக்கெட் செயற்பாடுகள் இடையூறு இன்றி தொடரும் என்றபோதும் இந்தத் தடை ரத்துச் செய்யப்படாது என்று ஐ.சி.சி சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

“தடை நீக்கப்படாது என்று சபையினால் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் கிரிக்கெட் செயற்பாடுகள் வழக்கம்போல் இடம்பெறும்” என்று ஐ.சி.சி சபைக் கூட்டம் தொடர்பில் நெருக்கமான வட்டாரம் ஒன்று கிரிக்பஸ் இணையதள செய்திக்கு தெரிவித்துள்ளார். அஹமதாபாத் ஐ.டீ.சி நர்மதா ஹோட்டலில் நடைபெற்ற ஐ.சி.சி சபைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவும் பங்கேற்றிருந்தார்.

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் ஜனவரி 14 தொடக்கம் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்த ஏற்பாடாகி இருந்தது. இந்நிலையில் அந்தப் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அது அந்நாட்டு எஸ்.ஏ20 லீக் போட்டிகளின் திகதியுடன் பொருந்துவதாக உள்ளது. இந்த டி20 லீக் ஜனவரி 10 தொடக்கம் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இரு தொடர்களையும் சம காலத்தில் நடத்த முடியும் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT