ஒரு நாள் , 20க்கு 20 போட்டிகளின் தலைவராக மீண்டும் மெத்திவ்ஸ்; டெஸ்ட் அணிக்கு சந்திமால் | தினகரன்

ஒரு நாள் , 20க்கு 20 போட்டிகளின் தலைவராக மீண்டும் மெத்திவ்ஸ்; டெஸ்ட் அணிக்கு சந்திமால்

 

இலங்கை ஒரு நாள் மற்றும் 20 க்கு 20 அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன் டெஸ்ட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் செயற்படுவார். என இலங்கை கிரிக்கெட்டில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.அத்துடன் ஒரு நாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளின் உப தலைவராக சந்திமால் செயற்படுவார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :

விளையாட்டுத்துறை அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் 16 பேர் கொண்ட அணியை தெரிவு செய்துள்ளோம்.

அணி விபரம் வருமாறு: அஞ்சலோ மெத்திவ்ஸ் (தலைவர்),உபுல் தரங்க,தனுஸ்க குணதிலக்க,குஷல் மென்டிஸ்,தினேஷ சந்திமால்,குஷல் பெரேரா,திஷர பெரேரா,அசேல குணரத்தன,நிரோஷன் திக்வெல்ல,சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர,செஷகான் மதுசங்க,அகில தனஞ்ஜய, லக்ஷான் சந்தகன்,வனிந்து ஹசரங்க .

இதேவேளை முக்கோண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணியில் டெஸ்ட் அணியின் தலைவர் சந்திமால் சேர்க்கப்பட்டுள்ளார். லசிந் மாலிங்க இடம்பெறவில்லை.

அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் சந்திக்க கத்துருசிங்கவின் முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த குழாமில், 3 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள, மணிக்கு 140 கி.மி வேகத்தில் பந்துவீசுகின்ற, அனுபவமில்லாத 21 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளரான செஹான் மதுஷங்க முதற்தடவையாக ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் டுபாயில் நடைபெற்ற ரி-10 போட்டிகளில் இவர் சிறப்பாக பந்துவீசியிருந்தமை தேசிய அணியில் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளை கருத்திற்கொண்டு புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க செஹான் மதுஷங்கவை ஒரு நாள் அணியில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செஹான் மதுஷங்கவை ஒரு நாள் அணியில் இணைத்துகொள்ள நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை அணியில் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க கருத்து பதிலளிக்கையில்,

”எம்மிடம் இரண்டு விதமாக திட்டங்கள் உள்ளன. இதில் செஹான் மதுஷங்க எம்முடைய தூர நோக்கு இலக்காக அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்த மதுஷங்கவைப் போன்ற வீரரொருவர் அணிக்குத் தேவை என நாம் கருதினோம். தற்போது சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக அணியில் உள்ளனர். எனினும், 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு குறைந்தது 7 வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருக்க வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு தற்பொழுது முதல் வாய்ப்பளித்தால் எதிர்காலத்தில் எமக்கு சிறந்த பலனைக்கொடுக்கும் என நாம் கருதுகிறேன்” என்றார்.

அதேநேரம் இலங்கை ஒரு நாள் அணிக்காக விளையாடுவதற்கு பெரிதும் எதிர்பார்த்திருந்த லசித் மாலிங்கவுக்கு இத்தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், சுரங்க லக்மால், நுவன் பிரதீப் ஆகியோருடன் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் முத்தரப்பு ஒரு நாள் தொடரிற்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தும் நோக்கில் இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த இளம் வலதுகை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்ற டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலும் மீண்டும் ஒருநாள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஒரு நாள் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், ”ஒரு நாள் அணியில் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளர் என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். எனினும், கடந்த வருடம் பின்னடைவை சந்தித்தேன். எனவே, இத்தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இதேநேரம், அண்மையில் நிறைவடைந்த இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிய லஹிரு திரிமான்ன மற்றும் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முன்னதாக 23 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம்பெறாத சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வருகின்ற உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகின்ற வனிந்து ஹசரங்க, அண்மையில் நடைபெற்ற போட்டியில் சதம் குவித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இளம் சுழற்பந்துவீச்சாளரான ஜெப்ரி வெண்டர்சேவை உபாதை காரணமாக ஒரு நாள் அணியில் இருந்து நீக்குவதற்கு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ள அதேநேரம், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அகில தனஞ்சய மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் மற்றும் ரி-20 தொடரில் இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய திசர பெரேராவை சகலதுறை வீரராக அணிக்குள் தக்கவைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டி சில்வாவும் உபாதை காரணமாக ஒரு நாள் குழாமில் இடம்பெறவில்லை.

இலங்கை அணிக்கு தலைமை பதவி மீண்டும் பெற்றுக் கொண்டு வழி நடத்த வேண்டும் என விடுத்த வேண்டு கோளுக்கு அமையவே அவர் தலைமை பொறுப்பேற்பதாக அறிவித்தார்.

உடற்தகுதி சோதனையை அஞ்சலோ மெத்திவ்ஸ் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தார்.

டிசம்பர் மாதம் இந்தோரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியின்போது பின்தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் தற்பொழுது சுகம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டி வரை உடற்தகுதியுடன் இருப்பதை கருத்தில் கொண்டு காயங்களை தவிர்ப்பதற்காக மெத்திவ்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசமாட்டார் என தெரிவுக்குழு தலைவர் கிரஹம் லெப்ரோய் தெரிவித்தார்.

அவர் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிக்கு மீண்டும் ஒருமுறை தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோன்று அவர் அடுத்த உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்கு தலைவராக செயற்படுவார்.

சிம்பாப்வேயுடனான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இலங்கை தோற்றதை அடுத்து மெத்திவ்ஸ் கடந்த ஜூலை மாதம் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்தார். அவர் இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை வகித்துள்ளார். அதில் அணி 47 போட்டிகளில் வென்றுள்ளதுடன் 45 போட்டிகளில் தோற்றுள்ளது.

மெத்திவ்ஸின் இராஜினாமாவை அடுத்து இலங்கை ஒரு நாள் அணிக்கு சரியான தலைமை இல்லாமல் போனதால் உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா என நான்கு வீரர்கள் மாறி மாறி தலைமை வகித்தனர்.

இந்த முத்தரப்பு தொடரை அடுத்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ரி-20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.

மெத்திவ்ஸ் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அவர் மூவர் கொண்ட தேர்வுக் குழுவில் ஒருவராக இடம்பெறுவார். இதில் புதிய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.

“சுற்றுப்பயணத்தின்போது இறுதி பதினொரு வீரரை அவரால் (ஹத்துருசிங்க) தேர்வு செய்ய முடியும். அணியின் முகாமையாளர் மற்றும் அணித் தலைவரும் சக தெரிவாளர்களாக இருப்பார்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

1973 இலங்கை விளையாட்டு சட்டத்தில் பயிற்சியாளருக்கு தேசிய தெரிவாளராக செயற்பட அனுமதி இல்லை. என்றபோதும் இந்த மாற்றத்திற்கு சிறப்பு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தேசிய தேர்வுக் குழுவால் குழாம் தேர்வுசெய்யப்படும்போது தலைமை பயிற்சியாளருக்கு தீர்மானம் எடுக்க அனுமதி இல்லை.

இதேவேளை, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 13ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் சிம்பாப்வேயையும், 19ஆம் திகதி பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.

பரீத் ஏ.றகுமான்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...