Friday, April 26, 2024
Home » எரிபொருள் விலைத் திருத்தத்திற்காக பஸ்கட்டணம் அதிகரிக்கப்படலாகாது!

எரிபொருள் விலைத் திருத்தத்திற்காக பஸ்கட்டணம் அதிகரிக்கப்படலாகாது!

by sachintha
November 3, 2023 6:00 am 0 comment

டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இத்திருத்தத்தின்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் ரூ 9.00 இனால் குறைக்கப்பட்டுள்ளதோடு, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றருக்கு ரூ. 3.00 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் ரூ. 5.00 இனாலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் ரூ.10.00 இனாலும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் ரூ. 7.00 இனாலும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலைத் திருத்தங்களை எரிசக்தி, மின்சக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துளளது.

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே இந்நாட்டிலும் எரிபொருட்களின் விலைகளில் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது.

டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பயணிகள் பஸ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பஸ் கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின்படி, பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு டீசல் கட்டணம் 4 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய எரிபொருட்களின் திருத்தம் அவ்வாறு அதிகரிக்கப்பட்டதாக இல்லை. அதனால் பயணிகள் பஸ் கட்டணத்தை அதிகரிக்க இடமில்லை.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, ‘தற்போதைக்கு பஸ் கட்டணத்தை அதிகரிக்காத போதிலும் குறுகிய தூர பஸ் சேவையின் போது ஆயிரம் ரூபா அளவிலும் நீண்ட தூர பஸ் சேவையின் போது இரண்டாயிரம் ரூபா அளவிலும் தினமும் நஷ்டத்திற்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்றுள்ளார்.

இதேவேளை அகில இலங்கை பாடசாலை சிறுவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தினர், ‘டீசல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் சிறுவர் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது’ என்றுள்ளனர்.

டீசல் விலையை அதிகரிக்கும் வகையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சங்கங்களும் நடவடிக்கை எடுக்காமையைப் பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கலாகாது. ஏனெனில் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் திருத்தம் செய்யப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் விலைஅதிகரிக்கப்படுவதில்லை. குறைக்கப்படும் சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் பயணிகள் போக்குவரத்துக் கட்டணங்கள் குறைக்கப்படுவதில்லை. அந்த வகையில் இந்த எரிபொருள் விலைத்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க பஸ் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் நாடு முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் எல்லாத் தரப்பினரும் தாக்கங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்தனர். ஆனால் பல தரப்பினருக்கும் நிவாரணங்களும் சலுகைகளும் ஏற்கனவேபெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்பொருளாதார நெருக்கடியினால் தோற்றம் பெற்ற தாக்கங்கள், அழுத்தங்கள் மற்றும் பாதிப்புக்களின் போது பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பொறுமை காத்தனர். பயணிகள் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் அவர்கள் சகித்துக் கொண்டனர். நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறு பொறுமை காத்த மக்கள் தமக்கு நிச்சயம் நிவாரணம் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அந்த எதிர்பார்ப்புக்கு அமைய பொருளாதார நெருக்கடி காலத்தில் முகம்கொடுத்த அசௌகரியங்களும் அழுத்தங்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. மக்கள் பொறுமை காத்து எதிர்பார்த்திருந்ததற்கு அமைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று வந்ததற்கு அமைய அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் எப்போதும் செயற்பட்டு வருவதை மறந்து விடலாகாது. அதனால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடடுள்ள தனியார் பஸ் போக்குவரத்து துறையினர் முகம்கொடுத்துள்ள அசௌகரியங்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் கவனத்தில் கொள்ளப்படாமல் இருக்கப் போவதில்லை. எனவே பயணிகள் போக்குவரத்து கட்டணங்கள் குறித்து பயணிகளின் நலன்களை முன்னிலைப்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்வது இன்றியமையாதது. அதுவே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT