Thursday, May 9, 2024
Home » முதலீட்டுச் சபையின் முதலாவது விருது விழா ஜனாதிபதி தலைமையில்

முதலீட்டுச் சபையின் முதலாவது விருது விழா ஜனாதிபதி தலைமையில்

- சாதகமான முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி நாட்டிற்கு வலுவான பொருளாதாரம்

by Rizwan Segu Mohideen
April 3, 2024 3:38 pm 0 comment

நாட்டிற்கு உகந்த போட்டித்தன்மையுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆற்றிய சிறப்பான பங்கிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

முதலீட்டுச் சபையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன்முறையாக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதி செயல்திறனுக்கான பங்களிப்புக்காக முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு 30 விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். நீண்டகாலமாக செயற்பட்டு வரும் நிறுவனங்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டன.

மேலும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய விசேட பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட புதிய விருதுகள் பிரிவின் கீழ், பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஓமார் , மாஸ் ஹோல்டிங்ஸ் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தேசமான்ய மகேஷ் அமெலின் மற்றும் செயில் லங்கா யாத்ரா குழுமத்தின் தலைவர் பியரே பிரின்ஜன்ஸ் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விருது வழங்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு பியகம முதலீட்டு வலயம் திறந்துவைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தெற்காசிய பிராந்தியத்தில் விசேட பொருளாதார வலயங்களை நிறுவுவதில் இலங்கை முன்னோடியாக செயற்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கட்டுநாயக்கா மற்றும் பியகம போன்ற முதலீட்டு வலயங்களுக்கு பிரதான முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் வெற்றியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

முதலீட்டுச் சபை நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு 45 வருடங்களாகின்றன. 1977 இல், ஜே. ஆர். ஜயவர்தன நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை திறந்து விடத் தீர்மானித்தார். ஒரு பகுதி கட்டுப்படுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரேயடியாக பொருளாதாரத்தை முழுமையாக திறக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். அதற்கமைய ஜனாதிபதி ஜே.ஆர்.பாரிய கொழும்பு பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.

இதற்காக பியகத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். 1987 ஜனவரியில், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னரே கட்டுநாயக்க முதலீட்டு வலயம் உருவானது. இரண்டாவது முதலீட்டு வலயம் பியகம முதலீட்டு வலயமாகும்.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு (UNIDO) பியகமவில் இருந்து முதலீட்டு வலயத்தை உருவாக்குவது சாத்தியமற்றது எனக் கூறி வெளியேறியது. ஆனால், பியகமவில் முதலீட்டு வலயத்தை உருவாக்க முடியும் என அன்றிலிருந்த முதலீட்டு சபையிலுள்ள பொறியியலாளர்கள் குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் பியகம முதலீட்டு வலயத்தை உருவாக்கினர்.

இந்த நாட்டில் முதலீட்டு வலயங்களின் ஆரம்பம் அப்படித்தான் நடந்தது. எமது நாட்டில் முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதில் பங்களித்த பலருக்கு நான் எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த இரண்டு முதலீட்டு வலயங்களிலும் எல்.ரீ.ரீ.ஈயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் ஜே.வி.பியின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த இரண்டு முதலீட்டு வலயங்களையும் பாதுகாக்க, உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கோரினர்.எப்படியாவது அந்த அச்சுறுத்தல்களிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்பட்டோம். மேலும், இந்த முதலீட்டு சபைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து பாதுகாக்கப்பட்டன.

ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க தீர்மானித்தார். அவர் அதை 100 தொழிற்சாலைகளுடன் தான் ஆரம்பித்தார். ஆனால் அவற்றை இந்த பிராந்தியங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்தப் பொறுப்பு முதலீட்டு சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் ஆடைத் தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. 200 ஆடைத்தொழிற்சாலைகளை நிர்மாணித்தமை எமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும்.

வாராந்தம் தொழிற்சாலைகளை திறந்தோம். அப்படித்தான் இந்த நாடு முன்னெறியது. புதிய தலைநகரையும் நாம் உருவாக்கினோம். மகாவலி திட்டம் உருவாக்கப்பட்டது. வீடமைப்புத் திட்டங்கள் ஆர்பிக்கப்பட்டன. இதன் மூலம் 15 வருடங்களில் நாடு முழுவதும் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்தோம்.

மிகவும் மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளோம். நீங்கள் அனைவரும் அதற்கு முகங்கொடுத்தீர்கள். பொருளாதார ரீதியில் அவர்கள் அனைவரினதும் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப இந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எம்மால் முடிந்தது. அந்த நிலைமையை நாங்கள் தற்போது பேணி வருகிறோம். பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நாம் இனி மத்திய வங்கியைச் சார்ந்திருக்க மாட்டோம். அதற்காக நாம் சந்தையை நாடுவோம்.

அடுத்து, நமது பொருளாதாரத்தை அதிக போட்டி நிறைந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும். இதைச் செய்ய உங்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் செல்லும். இதற்கிடையில், முதலீட்டு சபையையின் தன்மையை பொருளாதார ஆணைக்குழுவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் மூலம் முழு இலங்கையையும் உள்ளடக்கிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம்.அதன் பிரகாரம் முதலீட்டாளரான நீங்கள் அனுமதிப்பத்திரம் பெற்ற உரிமையாளராக மாறுவீர்கள். இதன் ஊடாக உங்களுக்கென வலயமொன்றை பேண முடியும்.

தற்போது பியகம பிரதேசத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. திருகோணமலையில் மூவாயிரம் முதல் நான்காயிரம் ஏக்கர் காணி தேடப்படுகிறது. வடக்கில் மேலும் ஆயிரம் ஏக்கர் இருக்கிறது. ஹம்பாந்தோட்டையிலும் சுமார் மூவாயிரம் முதல் நான்காயிரம் ஏக்கர் காணி இருக்கிறது. இதனால்தான் உட்கட்டமைப்பு வசதி குறித்து நாம் கவனம் செலுத்துகிறோம்.

நாங்கள் இப்போது அதிக போட்டித்தன்மையான முதலீடுகளைப் பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பொருளாதாரத்தை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றவும், நாட்டை முதலீட்டுக்கு ஏற்றதாக மாற்றவும் முயன்று வருகிறோம்.

நாங்கள் முழு தொழிற் பயிற்சி முறையையும் மறுசீரமைக்க வேண்டும். அதற்காக தொழிற்பயிற்சி நிலையங்கள் படிப்படியாக ரத்துச் செய்யப்பட்டு அதற்கு பதிலாக தொழிற்கல்லூரிகள் தொடங்கப்படும்.

எனவே, மாணவர்கள் தங்கள் பாடசாலையிலிருந்து தொழிற்கல்லூரிக்கு மாறும்போதும், புதிய விடயப்பரப்பில் முன்னேறும்போதும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை இழக்கப்படுவதில்லை. புதிய கனிஷ்ட தொழில்நுட்ப நகரங்களை அமைப்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் இதுபோன்ற மூன்று அல்லது நான்கு நகரங்களை உருவாக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம். ஒரு புதிய டிஜிட்டல் பரிமாற்ற நிறுவனம் நிறுவப்படும், அதே போல் செயற்கை நுண்ணறிவு (AI)க்கான நிதியம் ஆரம்பிக்கப்படும். விவசாய நவீனமயமாக்கல் திட்டமானது, தற்போதுள்ள விளைநிலங்களுக்கு மேலதிகமாக பத்து ஆண்டுகளில் புதிதாக 500,000 ஏக்கர் நிலத்தில் பயிரிட முடியும். அதில், அதிக விளைச்சல் தரும் விவசாயம் உருவாகும்.

விநியோகச் சங்கிலி மையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் முதலில் இலங்கை மீதான உங்கள் நம்பிக்கை மற்றும் இலங்கையில் மீண்டும் மீண்டும் முதலீடு மற்றும் வெளியில் இருந்து வரும் புதிய முதலீட்டாளர்களைப் பொறுத்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் சபையின் கீழ் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் ஒன்றாக இருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT