Friday, May 31, 2024
Home » சிறுபோக செய்கைக்கு நீர் வழங்கலில் சிக்கல்; குமுழமுனை கமநல நிலையத்தில் ஆராய்வு

சிறுபோக செய்கைக்கு நீர் வழங்கலில் சிக்கல்; குமுழமுனை கமநல நிலையத்தில் ஆராய்வு

by Gayan Abeykoon
May 9, 2024 7:05 am 0 comment

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்  சிறுபோகச்  செய்கைக்கான  நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பது  தொடர்பாக    குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த வருடத்தில் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 2,700 ஏக்கரில் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கழிவு நீரில் சுமார் 1,000 ஏக்கரில்  நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வருடத்தில் தீர்மானிக்கப்பட்டதை விட அதிகளவாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதால் தற்போது தண்ணிமுறிப்பு  குளத்திலுள்ள நீர் போதாமலுள்ளது.  தற்போது மழை இல்லாத நிலையில் வெப்பமான காலநிலையும் நிலவி வருகின்றது.

ஆகையால் நீரை விரயமாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தி நெற்செய்கை  நிலங்களுக்கு  பாய்ச்சுவதன் மூலமே சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள  முடியுமென கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்  நெற்செய்கைக்கு தேவையான நீரை விரயமாக்காமல்  பயிருக்கு பாய்ச்சுதல், நீரை பகிர்ந்தளிக்கும் முறை, நீரை  சேமிக்கும் முறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிறுபோகச் செய்கை பண்ணப்பட்டுள்ள  அனைத்து வயல்  நிலங்களுக்கும் வழமை போன்று  நீரை பாய்ச்சுமாறும்  அதற்கு தாமே  பொறுப்பென்று இந்தக் கலந்துரையாடலில்  விவசாயிகள் கூறினர்.  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்தக்  கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் மஞ்சுளா ஜொய்ஸ்குமார், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உமாமகள், கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர், விவசாயிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தராகிய பலரும் கலந்துகொண்டனர்.

ஓமந்தை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT