Monday, April 29, 2024
Home » பொருளாதார வீழ்ச்சிக்கு மீண்டும் இடமளிக்கலாகாது!

பொருளாதார வீழ்ச்சிக்கு மீண்டும் இடமளிக்கலாகாது!

by sachintha
March 30, 2024 6:00 am 0 comment

நாட்டின் அரசியல் களத்தில் தற்போது தேர்தல் தொடர்பான பரபரப்பு உருவாகியிருக்கின்றது. கடந்த ஓரிரு மாதங்களாக இவ்வாறான பரபரப்பொன்று நிலவி வருகின்து. அரசியல்வாதிகள் மத்தியில் மாத்திரமன்றி, மக்களிடமும் இத்தகையதொரு பரபரப்பு நிலவி வருகின்றது.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் எந்தத் தேர்தல் முதலில் நடைபெறுமென்று உறுதியான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன் பின்னர் பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் நடைபெறுமென்றே அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் நிலவுகின்றன. அவ்வாறானால் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியிலும், பாராளுமன்றப் பொதுத்தேர்தல் அடுத்த வருடமும் நடைபெறலாமென்றே ஊகங்கள் நிலவுகின்றன.

எனவேதான் முதலில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தவாறு பிரதான அரசியல் கட்சிகள் தற்போது பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்ற வேட்பாளர்கள் யாரென்பது குறித்து உறுதியான அறிவிப்புகள் வெளியிடப்படாத போதிலும், தேர்தல் கூட்டணி அமைப்பதிலும் மக்களின் ஆதரவு தேடுவதிலும் அரசியல் கட்சிகள் தற்போது முனைப்புக் காட்டி வருவதைக் காண முடிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவரென்று எதிர்பார்க்கப்படுகின்ற வேட்பாளர்கள் தொடர்பான அபிப்பிராயங்கள் தற்போது ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் பலராலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்விப்புலத்திலுள்ள முக்கியஸ்தர்கள் மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும் இதுதொடர்பான அபிப்பிராயங்களைப் பதிவு செய்து வருவதைக் காண முடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்களென்று எதிர்பார்க்கப்படுகின்றவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான கருத்துகளே பொதுவெளியில் அதிகளவில் உலவுவதை அவதானிக்க முடிகின்றது. அதாவது நாட்டின் தலைமைத்துவத்தை மீண்டும் பொறுப்பேற்பதற்குப் பொருத்தமான அரசியல் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே பலரும் விரும்புவதாக அந்த அபிப்பிராயங்களை வாசிக்கின்ற போது புரிகின்றது. வடபகுதியைச் சேர்ந்த தமிழ் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தையே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமானால், தகுதி வாய்ந்த தலைமைத்துவமே முதலில் அவசியமாகின்றது. பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டுமானால் முதலில் அதற்கான வினைத்திறன்மிக்க திட்டங்கள் அவசியமாகின்றன. பொருளாதாரத் திட்டங்களில் திறமைமிக்க தலைவராக சர்வதேச ரீதியில் இனங்காணப்பட்ட தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.

முன்னைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதாரச் சிக்கல்களை மக்கள் இன்னுமே மறந்து விடவில்லை. மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் பெட்றோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்காக மக்கள் நாட்கணக்கில் இரவுபகலாக கியூவரிசையில் குவிந்து நின்ற காட்சிகள் கண்முன்னே இன்னும் நிழலாடுகின்றன.

எரிபொருள் விநியோக நிலையங்கள் மூடப்பட்டுக் கிடந்தன. ஆனாலும் எரிபொருள் கிடைக்குமென்ற நம்பிக்கையில் மக்கள் வீதியோரம் கடதாசியை விரித்து விடியவிடிய படுத்துக் கிடந்தனர். நான்கு லீற்றர் பெட்றோலைப் பெறுவதற்காக இருபத்துநான்கு மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.

உணவகங்களும் மூடப்பட்டுக் கிடந்தன. சமையல் எரிவாயு கிடைக்காததால் உணவகங்களில் உணவைச் சமைக்க முடியவில்லை. ஹோட்டல்களின் வருமானம் முற்றாகவே பாதிக்கப்பட்டதால் அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் பலர் முற்றாகவே வருமானம் இழந்தனர். சிறுதொழில் புரிந்த இவ்வாறான ஊழியர்கள் ஏராளமானோர் முற்றாகவே வருமானம் இழந்து போனதால், அவர்களது குடும்பங்களே பட்டினியால் வாட வேண்டியிருந்தது.

தவறான பொருளாதாரக் கொள்கைகளால் உண்டான விபரீதங்களே இவையாகும். நாட்டை ஆட்சி செய்வதென்பது ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதைப் போலவோ அல்லது ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதைப் போலவோ அல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரம் அனுபவத்தின் மூலம் மிகக்கவனமாக முன்கொண்டு செல்லப்பட வேண்டியதாகும். அதற்கு அனுபவம், ஆற்றல், திறமை, கல்வித்தரம் போன்றனவெல்லாம் அவசியமாகின்றன.

கடந்த கால தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு அதலபாதாளத்தில் வீழ்ச்சியடைந்திருந்த வேளையில், அரசாங்கமும் ஆட்டம் கண்டது. நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டியிருந்த வேளையில், நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கு அரசியல் தலைவர்கள் எவருமே முன்வரவில்லை.

அவ்வேளையில் துணிச்சலுடன் நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்று வழிநடத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார். அவர் முன்னெடுத்த சிறப்பான திட்டங்கள் காரணமாகவே எமது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து பெருமளவில் மீண்டெழுந்துள்ளது. ஜனாதிபதியின் ஆற்றலும் திறமையும் அனுபவமுமே இதற்கான காரணங்களாகும்.

அரசியல் தலைவர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் நிறைந்தவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கணிக்கப்படுவதாலேயே, நாட்டின் தலைமைத்துவத்தை மீண்டும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென்ற கருத்துகள் பலதரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT