Saturday, April 27, 2024
Home » முதல் போட்டியில் வென்றது இலங்கை மகளிர் இளையோர்
19 வயதுக்கு உட்பட்ட முக்கோண தொடர்:

முதல் போட்டியில் வென்றது இலங்கை மகளிர் இளையோர்

by Gayan Abeykoon
March 29, 2024 12:06 pm 0 comment

அவூஸ்திரேலிய மகளிர் இளையோர் அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட மகளிர் முக்கோண டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் இளையோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை இளையோர் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீராங்கனை சஞ்சனா கவிந்தி 27 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 28 ஓட்டங்களை பெற்றார். விக்கெட் காப்பாளரான சுமுது நிசன்சலா 17 பந்துகளில் 19 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ஹஸ்ரத் கில் மற்றும் எலினர் லரோசா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த அவூஸ்திரேலிய அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையூம் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை வீராங்கனைகளால் முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸி. வீராங்கனைகள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தேவையான ஓட்ட வேகத்தை தக்கவைக்க முடியவில்லை.

இதில் ஆஸி. மகளிர் இளையோர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களையே பெற்றது. மத்திய வரிசையில் எலீனோர் லரோசா சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை சார்பில் சிறப்பாக பந்து வீசிய தெவ்மி விஜேரத்ன 4 ஓவர்களுக்கும் 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த முக்கோணத் தொடரில் பங்கேற்றிருக்கும் மற்ற அணியாக இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட அணி இன்று அவூஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT