Sunday, April 28, 2024
Home » மகத்துவம் மிக்க இறுதிப் பத்து நாட்கள்

மகத்துவம் மிக்க இறுதிப் பத்து நாட்கள்

by Gayan Abeykoon
March 29, 2024 12:26 pm 0 comment

ரமழான் மாதத்தின் மூன்றில் இரண்டு பகுதியை நிறைவு செய்து கொண்டுள்ள முஸ்லிம்கள் மற்றொரு முக்கிய பகுதியை அண்மித்துள்ளனர். அது தான் ரமழானின் இறுதிப் பகுதியாகும்.

அருள் மறையாம் அல்குர்ஆன் அருளப்பட ஆரம்பமான ரமழான் மாதம் சிறப்புக்கள் நிறைந்தது. அதிலும் அதிசிறப்புக்குரிய பகுதி தான் இறுதிப் பத்தாகும். கடைசிப் பத்து இரவு என்று வர்ணிக்கப்படுகின்ற மிகமிக சிறப்பிற்குரிய இரவுகள் இக்காலப்பகுதிக்குள் தான் அமைந்துள்ளன.

இந்தப் பத்து இரவுகளில் தான் அல் குர்ஆன் அருளப்பட்ட லைலத்துல் கத்ர் இரவு அமைந்திருக்கிறது. அந்த இரவை ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாக அல்லாஹ் மேம்படுத்தி வைத்திருக்கின்றான். இந்த இரவை அடைந்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அதிக அக்கரையும் சிரத்தையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதற்கு அன்னாரின் பல நபிமொழிகள் சான்றாதாரமாக உள்ளன.

அதனால் இந்த இரவுகள் இறைவணக்கங்களில் பூத்துக்குழுங்கும் இரவுகளாக விளங்குகின்றன. இறைவிசுவாசிகள் பெரிதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய இந்த இரவுகளில் அதிகமதிகம் நல்லமல்களில் ஈடுபடவும், குறிப்பாக தொழவும், ஸுஜுதில் நேர காலத்தைக் கழிக்கவும், குர்ஆன் ஒதவும், அதனை விளங்கவும் தானதர்மங்களில் ஈடுபடவும் நற்காரியங்களை மேற்கொள்ளவும் தவறக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானுடைய கடைசி பத்து வந்து விட்டால் உலகின் எல்லா தேவைகளையும் ஒதுக்கி விட்டு இறைவணக்கங்களில் காலத்தைக் கழித்தார்கள். இதன் நிமித்தம் குடும்ப உறவுகளில் இருந்து ஒதுங்கி மஸ்ஜித்தில் இஃதிகாப் இருந்தார்கள்.

அல்லாஹ்வுக்கான இறைவணக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில் அன்னார் இக்காலப்பகுதியில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். அல்லாஹ் என் நிலையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும், மறுமையின் வெற்றிதான் எனது இலக்கு என்பதற்காக அவனிடத்தில் மன்றாட வேண்டும். அதற்காக அன்னார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அந்த வகையில் நபிகளாரை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் இந்த ரமழானுடைய கடைசி பத்தில் அல்லாஹ்வை தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும், தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கும், மஸ்ஜிதுகளில் அதிக நேரகாலத்தைக் கழித்து, துஆகளில் ஈடுபடுவதிலும் இஸ்திஃபார் செய்வதிலும் நேர காலத்தைக் கழிக்க முயற்சிக்க வேண்டும்.

ஒரு தடவை ரஸுல் (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது, ‘நான் அந்த கடைசி பத்து இரவுகளில் நபியவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய அந்த சிரத்தையையும் முயற்சிகளையும், வேறு நாட்களில் எடுத்துக் கொண்டதாக நான் பார்க்கவில்லை’ என்றுள்ளார்கள்.

குறிப்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ரமழானுடைய கடைசிப் பத்தில் அமல்களை அதிகம் செய்வதற்காக சிரமம் எடுத்துக் கொள்வார்கள். கடுமையாக முயற்சி செய்வார்கள். அது போன்று வேறு நாட்களில் அவர்கள் முயற்சி செய்ததில்லை என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.                          (ஆதாரம்: முஸ்லிம்)

பொதுவாக ரஸுல் (ஸல்) அவர்களுடைய இரவு வணக்கங்கள் அதிக முயற்சியுடனானதாக இருக்கும். நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் மற்றொரு சந்தார்ப்பத்தில் குறிப்பிடும் போது, ரமழானுடைய கடைசிப் பத்து வந்து விட்டால் அன்னார் இரவெல்லாம் விழித்து இருப்பார்கள். தனது குடும்பத்தார்களையும் இறை வணக்கங்களுக்காக எழுப்பி விடுவார்கள். தமது கீழ் ஆடையை அன்னார் இறுக்கிக் கட்டிக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

நபி (ஸல்) அவர்கள், ரமழான் மாதத்தை தவிர (வேறு காலங்களில்) ஒரு இரவில் முழு குர்ஆனையும் ஓதி நான் பார்த்ததில்லை, இரவெல்லாம் தொழுததையும் நான் பார்த்ததில்லை, ஒரு மாதம் முழுவதும் அன்னார் நோன்பு வைத்ததையும் நான் பார்த்ததில்லை என்றும் ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: நஸாயி)

இந்த ஹதீஸ்களின் மூலம் ரமழான் மாதம் வந்து விட்டால் ரமழானுடைய இரவுகளில் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என்பது தெளிவாகிறது.

அத்தோடு தான் மாத்திரமல்லாமல் தன்னுடைய குடும்பத்தார்களையும் இறைவணக்கங்களுக்காக எழுப்பி விடக்கூடியவர்களாகவும் அன்னார் இருந்தார்கள். குறிப்பாக நீங்களும் எழுந்து தொழுங்கள் அவர்களை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டக்கூடியவர்களாக இருந்தார்கள்.

தான் இபாதத் செய்கின்ற அதே நேரத்தில் தங்களுடைய மனைவிமார்களும், அந்த இபாதத்களில் ஈடுபடுவது தொடர்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹுத்தஆலா ரமழானின் கடைசி பத்தில் நம்மீது அருளையும், நன்மைகளையும் பொழிய வேண்டும் என்பதற்காக லைலத்துல் கத்ர் என்ற அந்த உயரிய இரவை வைத்திருக்கிறான். அந்த இரவை அடைவதற்காகவே நாம் பத்து நாட்களில் ஒரு நிமிடம் கூட தூங்காமல் இருந்தாலும், அது ஈடாகாது. அவ்வாறு மகத்துவமும் சிறப்பும் கொண்ட இரவு தான் லைலத்துல் கத்ருடைய இரவு ஆகும்.

யார் ரமழானுடைய மாதத்தில் ஈமானோடு நன்மையை ஆதரவு வைத்தவராக நோன்பு வைத்தார்களோ அவர்களுடைய முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடும். அது போன்று லைலத்துல் கத்ர் உடைய இரவில் யார் ஈமானோடு நன்மையை ஆதரவு வைத்தவராக நின்று வணங்குகிறாரோ அவருக்கும் முந்திய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது.

இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவை தேடித்தான் ரஸுல் (ஸல்) அவர்கள் தங்களுடைய எல்லா உறவுகளையும் ஒதுக்கிக் கொண்டு மஸ்ஜிதில் இஃதிகாப் இருந்தார்கள்.

குறிப்பாக ரமழானுடைய முதல் பத்தில் அன்னார் இஃதிகாப் இருந்தார்கள். அதன் பின்னர் ரமழானுடைய நடு பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் இஃதிகாப் இருந்த அந்த கூடாரத்திலிருந்து தங்களது தலையை வெளியே நீட்டி மக்களை அழைத்து சொன்னார்கள்.

‘மக்களே… அருகில் வாருங்கள். இந்த இரவை அதாவது லைலத்துல் கத்ரைத் தேடி முதல் பத்தில் இஃதிகாப் இருந்தேன். இரண்டாவது பத்தில் இஃதிகாப் இருந்தேன். பிறகு இந்த கடைசி பத்தில் தான் லைலத்துல் கத்ரு இரவு அமைந்திருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது ஆகவே இந்த கடைசி பத்தில் லைலத்துல் கத்ரு இருக்கின்றன. அதை அடைவதற்காக இஃதிகாப் இருக்க விரும்புபவர்கள் இந்த கடைசி பத்தில் இஃதிகாப் இருக்கட்டும் என்றார்கள். அதனைத் தொடர்ந்து மக்களெல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களோடு இஃதிகாப் இருந்தார்கள்.

ரமழானுடைய கடைசி பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று குறிப்பிட்டுள்ள நபி (ஸல்) அவர்கள் ஒற்றைப் படையான இரவுகளில் தேடுங்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

ஆகவே இறையருளை அடைந்து கொள்வதற்காக இந்த சிறப்பான காலப்பகுதியை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வதில் உச்சபட்ச கவனத்தை எடுத்துக் கொள்வோம்.

மௌலவி

   எம்.யூ.எம். வாலிஹ்…

(அல் அஸ்ஹரி), வெலிகம

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT