Monday, April 29, 2024
Home » சிறுநீரக நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் கூடுதலான நிதி ஒதுக்கீடு

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் கூடுதலான நிதி ஒதுக்கீடு

by sachintha
March 19, 2024 8:43 am 0 comment

இலங்கையில் அதிகரித்துக் காணப்படும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, வைத்தியசாலைகளிலும் சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சைப் பிரிவுகளை நவீனமயப்படுத்தி வருவதாக, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

சிறுநீரக நோய் தொடர்பான கண்காட்சி அம்பாறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது பிராந்தியத்தில் சிறுநீரக நோயாளர்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றனர். இதற்கு கூடுதலான நிதி செலவிடப்படுகின்றது சிறு வயதிலிருந்தே சீரான உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதோடு, சுத்தமான குடிநீரை பருகுவதன் மூலம் நீரினால் ஏற்படக்கூடிய நோய்களை தவிர்க்க முடியும். இந்நோயினால் இலங்கையில் நாளாந்தம் கூடுதலான மரணங்கள் ஏற்படுகின்றன.

பொது மக்கள் அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுடைய சிறுநீரகங்களை பரிசோதைனை செய்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சுகாதாரதுறைக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து மக்களின் நலன்கருதி பல்வேறு வேலைத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.

பொத்துவில், அக்கரைப்பற்று,அம்பாறை, மாஹாஓயா மற்றும் தெஹியத்தக்கண்டிய ஆகிய வைத்தியசாலைகளிருந்து சிறுநீரகநோய் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

சிறுநீரக நோய் தொடர்பான ஆரம்ப அறிகுறிகள் அதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் விபுல சந்திரசிறி, அம்பாறை பொது வைத்தியசாலை சிறுநீரக விசேட வைத்தியர் நிபுணர் நியோமி, வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT