Thursday, May 16, 2024
Home » புனித யோசேப்பு கன்னி மரியாளின் கணவர் திருவிழா இன்று

புனித யோசேப்பு கன்னி மரியாளின் கணவர் திருவிழா இன்று

by sachintha
March 19, 2024 9:01 am 0 comment

கத்தோலிக்க திருச்சபையானது இன்றைய தினம் புனித யோசேப்பு கன்னி மரியாளின் கணவர் திருவிழாவைக் கொண்டாடுகிறது.

புனித சூசையப்பர் அல்லது யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையும் புனித கன்னி மரியாளின் கணவருமாவார். நாசரேத்தில் வாழ்ந்து வந்த யோசேப்பு தச்சுத் தொழில் செய்து வந்தார்.

திருச்சபையில் புனிதர்கள் வரிசையில் புனித கன்னி மரியாளுக்கு அடுத்தபடியாக புனித யோசேப்பு மதிக்கப்படுகின்றார். கிறிஸ்தவ வரலாற்றில் ஆரம்ப காலம் முதல் இவர் புனிதராக போற்றப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவருக்கு இரண்டு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. மார்ச் 19ஆம் திகதி புனித யோசேப்பு கன்னி மரியாளின் கணவர் என்ற திருவிழாவும் மே முதலாம் திகதி புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் என்ற திருவிழாவும் நினைவு கூரப்படுகின்றது. சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாளை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவையே . இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இப்போது ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியாள் திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். வானதூதர் கபிரியேல் யோசேப்பிற்குக் கனவில் தோன்றி நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்கிறபோது அவர் திறந்த மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்கிறார்.

யோசேப்பிடம் இருந்த அந்த திறந்த மனநிலை ஒவ்வொரு கணவன்மார்களிடமும் இருந்தால் குடும்பத்தில் பாதிப் பிரச்சனை குறைந்துவிடும். இன்றைக்கு கணவன்மார்களிடம் தன்னுடைய மனைவியைக் குறித்த திறந்த மனநிலை – உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை – இல்லாததனால்தான் எல்லாப் பிரச்சனைகளும், குழப்பங்களும் பூதாகாரம் எடுக்கின்றன

யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த பாடம் அவர் தாழ்ச்சியுள்ள/அகந்தையற்ற கணவராக விளங்கினார் என்பதுதான்.

யோசேப்பு ஒரு சிறந்த பொறுமைசாலியாகவும், பிடிவாதகுணமற்றவராகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மரியாள் கருவுற்றபோதும் சரி, ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோதும் சரி, எகிப்துக்குத் தப்பியோடிய போதும் சரி, எருசலேம் ஆலயத்தில் காணாமல் இயேசு போனபோதும் சரி மிகவும் பொறுமையாக இருக்கின்றார். தான் கொண்ட கருத்தான் சரி என்ற பிடிவாதக்குணத்தோடு இல்லாமல், உண்மையத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். யோசேப்பு ஒரு சிறந்த கணவனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவுக்கு ஒரு சிறந்த (வளர்ப்புத்) தந்தையாகவும் விளங்கினார். அறிவையும், ஞானத்தையும் நமக்குப் புகட்டியவர்.

இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்றால், அதில் யோசேப்பின் பங்கு மிக முக்கியமானது. யோசேப்பு ஒரு சிறந்த கணவராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தந்தையாகும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகது. எனவே நாம் யோசேப்பைப் போன்று திறந்த மனத்தினராக, தாழ்ச்சி உள்ள கணவராக, பொறுமையுள்ளவராக, சிறந்த தந்தையாக வாழ அழைக்கப்படும் அதே தருணத்தில், நாமும் நம்மோடு வாழும் தந்தையைப் பேணிப் பராமரிக்க, அவருக்குப் பெருமை சேர்க்க, அவர் உள்ளம் குளிரும்படியான வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.

ஆதலால் மரியாளின் கணவர் யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் நமது குடும்பங்களில் வாழும் தந்தையின் உள்ளம் குளிர நடந்துகொள்வோம். யோசேப்பிடம் விளங்கிய பண்புகளை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்

அருட்தந்தை மரிய அந்தனி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT