Home » இலங்கை தமிழ் இதழியலும் தினகரன் ஊடக ஆளுமையும்

இலங்கை தமிழ் இதழியலும் தினகரன் ஊடக ஆளுமையும்

by damith
March 18, 2024 6:18 am 0 comment

உலக மொழிகளில் இன்றளவும் தனது சீரிளமைத் திறன் குன்றாது உயிர்ப்புடன் வாழ்வது தமிழ் மொழியே. இந்தப் பெருமை நீடித்து வளர்ந்தோங்கச் செயல்பட வேண்டியது நமது நீங்காத வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், உயிர்ப்புடன் வாழ்வதற்கும் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. மக்களை மிக அதிகளவில் சென்றடையும் எழுத்தாவணங்களாக பத்திரிகைகள் விளங்குகின்றன.

தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த மொழியில் எழுதினார்களோ, பேசினார்களோ அந்த மொழியை இன்றளவும் நாமும் பேசுகிறோம், எழுதுகிறோம் என்பதுதான் நமக்குள்ள தலையாய பெருமையாகும்.

அந்தப் பெருமைகளுக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் பத்திரிகைகள் சான்று பகர்கின்றன. கடந்தகால சமூகத்தின் சமய, சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பரப்புக்களின் போக்கில் பத்திரிகைகளின் செல்வாக்கு குறைத்து மதிப்பிட முடியாதது.

வரலாறு எழுதுதலில் முதல்நிலைத் தகவல் வளங்களான பத்திரிகைகளின் உசாத்துணை அடிப்படையானதும் முக்கியமானதும் ஆகும். மக்களின் சிந்தனையில் பத்திரிகைகள் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றன அல்லது செலுத்த முற்படுகின்றன என்பதும் உண்மையே.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த நோக்குடன் மக்களுடன் உறவு கொண்டாடி, உலக கண்ணோட்டத்துடன் வாழ்ந்த தமிழர்கள், இன்று மொழியையும் பண்பாட்டினையும் சிறிது சிறிதாக இழந்து வாழும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இல்லை என்றால், காலப்போக்கில் தமிழ்மொழி அருகி அழிந்து விடும்.

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகைத் துறை என்பது மிக முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் பார்த்தோமானால், செய்தி மற்றும் தகவல்கள் எவ்வாறு சமூகத்தின் அடிப்படை அம்சமாக விளங்கியுள்ளது என்பதனை அறியமுடிகின்றது.

வாசிப்பினைப் பரவலாக்கியதன் மூலம் கல்வியறிவில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்திய இப்பத்திரிகைகள் செய்திகளையும் தகவல்களையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பினை ஆற்றியுள்ளன.

செய்யுள் நடையிலிருந்து உரைநடைக்குத் தமிழ் மாறிக் கொண்டிருந்த காலத்தில் வெளியாகத் தொடங்கிய இப்பத்திரிகைகள் தொடர்ச்சியாகத் தமிழ் உரைநடையின் போக்கில் முக்கிய செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

இன்று பத்திரிகைகளே உலகளாவிய தொடர்பு மொழியாகப் பேருருவம் எடுத்துள்ளன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் பத்திரிகைகள் வெளிவந்தாலும், அவற்றின் பொதுக்கருத்து மக்கள் தொடர்பு என்பதேயாகும்.

பல்வேறு நாடுகளில் தமிழ்மொழியை அறியாமலேயே தமிழ்ப் பெற்றோரின் எதிர்காலக் குழந்தைகள் வளர வேண்டிய அவலம் நேர்கிறது. வெளிநாடுகளில் வாழ நேர்ந்துள்ள குழந்தைகளுக்கு தமிழ்மொழி மட்டுமல்ல, மொழியின் அடிப்படையில் உருவான பண்பாடு, இசை உள்ளிட்டவை எதுவும் தெரியாது முற்றிலும் அந்நியமான சூழ்நிலையிலே வளர நேரிட்டுள்ளது.

தற்போது அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா, இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா, கனடாவில் பிறக்கும் மழலைகளை எடுத்துக் கொண்டால் தாய்மொழியான தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது.

ஒரு மொழியின் பயன்பாடு, அந்த மொழி பேசும் மக்களிடையே குறைந்துகொண்டு போவது, இறுதியில் அந்த மொழியின் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது திண்ணம்.

இலங்கை பத்திரிகைகளின் தோற்றம்:

இலங்கை பத்திரிகை வரலாற்றில் முதலாவதாக, வட்டுக்கோட்டையில் அமெரிக்க மிஷனரிமாரால் 1841 இல் ‘உதயதாரகை’ என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் The morning star என்றும் தமிழில் ‘உதயதாரகை’ என்றும் அழைக்கப்பட்ட இப்பத்திரிகை, இரு மொழிகளிலும் வெளிவந்தது. அமெரிக்க மிஷனரியின் இப்பத்திரிகை வெளியீடு மற்றைச் சமயத்தவரையும் பத்திரிகை வெளியிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

1876 இல் The catholic Gardian என்ற ‘சத்திய வேத பாதுகாவலன்’ என்ற பத்திரிகை கத்தோலிக்கத் திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின் இந்து சமயச்சார்பான ‘இந்துசாதனம்’ 11.09.1889 இல் Hindu organ என்ற பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. சுவாமி விவேகானந்தரின் சர்வசமய மாநாட்டு வெற்றியை முதன் முதலில் சிறப்பாகக் கொண்டாடிய தமிழ்ப்பத்திரிகை என்ற சிறப்பையும் இப்பத்திரிகை பெற்றது.

உதயமாகிய தினகரன் :

இலங்கை பத்திரிகையியலில் தினகரன் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் தினகரன் ஆகும்.

இப்பத்திரிகை 1932 இல் மார்ச் 15 ஆம் நாள் தலைநகர் கொழும்பில் இருந்து முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான ‘லேக் ஹவுஸ் நிறுவனம்’ இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகத் தொடங்கியது.

தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே. மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி. ராமநாதன், எஸ். ஈஸ்வர ஐயர், எஸ். கிருஷ்ண ஐயர், ரி. எஸ். தங்கையா, வீ. கே. பீ. நாதன், பேராசிரியர் க. கைலாசபதி, ஆர். சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பல பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்னர் மூடப்பட்டு விட்டன. ஆயினும் அமரர் டி.ஆர். விஜேவர்தனவால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் முக்கியமாக டெயிலி நியூஸ் (Daily News), தினமின, சிலுமின, தினகரன், தினகரன் வாரமஞ்சரி, ஒப்சேவர் போன்ற பத்திரிகைகள் இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி நிலைத்து நிற்கின்றன.

விஜேவர்தனவின் வரலாற்றுப் பணி:

இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயரும், புகழும் பெற்று இன, மத பேதங்களைக் கடந்து ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய பத்திரிகைகள் அமரர் விஜேவர்தனவால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்கள் பயனடையும் முறையிலே அவர்களின் விருப்புகளை நன்கு ஆராய்ந்து அவர் செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

அக்காலகட்டத்தில் பெயரும், புகழும் பெற்று விளங்கிய சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசாமி, ெடாக்டர் ஆனந்தகுமாரசாமி, சேர். பாரன் ஜயதிலக்க, ெடாக்டர் ரி.பி. ஜாயா, ஈ. டபிள்யூ பெரேரா, டி. எஸ். சேனநாயக்கா, எப். ஆர். சேனநாயக்கா போன்ற பெருமக்களோடு இணைந்து மூன்று மொழிகளிலும் இப்பத்திரிகைகளை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.

தமிழ்ப் பத்திரிகையான ‘தினகரன்’ சிறந்த பத்திரிகை ஆசிரியர்களால் திறம்பட நடத்தப்பட்டு வந்தமையை இங்கு குறிப்பிடவேண்டும். முக்கியமாக பேராசிரியர் கைலாசபதி, அமரர் சிவகுருநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இன்றைய தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஊடகத்துறையில் சிறப்பான அனுபவம் பெற்றவர். தினகரன் பத்திரிகையின் முன்னேற்றத்திற்காகவும், இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியும் பல செயற்பாடுகளை நெறிப்படுத்தி வருகின்றமையைக் காணலாம்.

அதேவேளை தினகரன் பத்திரிகையில் பணிபுரியும் சகலரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு பத்திரிகையின் வளர்ச்சிக்காக தம்மால் இயன்ற ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருவதை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா அவுஸ்திரேலியா இலங்கை தமிழ் இதழியலும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT