Friday, May 10, 2024
Home » உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் மிலேச்சத் தாக்குதல்

உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் மிலேச்சத் தாக்குதல்

- காசாலை நெருங்கியது உதவிக் கப்பல்

by Rizwan Segu Mohideen
March 15, 2024 8:38 am 0 comment

சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது. இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள தமது களஞ்சியங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதல்களில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதாக காசாவில் இயங்கும் ஐ.நா உதவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தினால் நடத்தப்படும் ரபா உதவி நிலையத்தின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையமானது காசா பகுதியில் உணவு விநியோகிக்கும் ஐ.நாவின் கடைசி மையங்களில் ஒன்றாகும். ஐ.நா நிறுவனத்தின் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை அந்த அமைப்பு கோரியுள்ளது.

அதேபோன்று உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஒருமுறை நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் 85 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரில் கடந்த செவ்வாய் மாலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா செய்தி வெளியிட்டுள்ளது.

காசா நகரின் தெற்கில் உள்ள குவைட் சுற்றுவட்டப்பாதையில் ஒன்று திரண்டு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீதே இஸ்ரேல் இராணுவம் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போர் காரணமாக காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள சூழலில் அங்குள் 2.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவிகளை விரைவாக வழங்குவதற்கு நன்கொடை நாடுகள், உதவி நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் முயன்று வருகின்றன.

போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான மத்தயஸ்தர்களின் முயற்சிகள் இதுவரை தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் நடவடிக்கைக்கு தமது படை அனைத்து இடங்களுக்கும் செல்லும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஸ்பெயின் ‘ஓபன் ஆர்ம்’ தொண்டு நிறுவனத்தின் உதவிக் கப்பல் இஸ்ரேலிய கடற்கரைக்கு அப்பால் தெற்காக மெதுவாக பயணித்து வருவதாக கடல் போக்குவரத்து தொடர்பான இணையதளத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

காசாவுக்கு கடல் வழியாக உதவிகளை வழங்கும் முதல் முயற்சியாகவே இந்தக் கப்பல் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் வானில் இருந்து உதவிகளை போடுவது மற்றும் கடல் வழியாக உதவிகளை வழங்கும் முயற்சிகள் தரை வழி உதவி விநியோகத்திற்கு ஈடாகாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் ஒக்ஸ்பாம் உட்பட 25 அமைப்புகள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ‘ஒபன் ஆர்ம்’ கப்பலின் வருகைக்காக காசா நகர மக்கள் காத்துள்ளனர்.

‘அவர்கள் உதவியை அனுப்புகிறார்கள், ஆனால் இந்த உதவி வரும்போது, அதை விநியோகிக்க எந்த நிறுவனமும் இல்லை’ என்று காசா நகர குடியிருப்பாளரான ஈத் அயூப் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். கடல் மற்றும் வான் மார்க்கமாக வழங்கப்படும் உதவிகள் போதுமாக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் பெரிய அளவான இரண்டாவது உதவிக் கப்பல் சைப்ரஸ் துறைமுக நகரான ல்னகாவில் இருந்து அனுப்பப்படவிருப்பதாக சைப்ரஸ் வெளியுறவு அமைச்சர் கொன்ஸ்டான்டினோ கொம்போஸ் தெரிவித்துள்ளார்.

கொம்போஸ் கடந்த புதனன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பிரிட்டன், ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் கடல் வழி உதவி விநியோகங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளார்.

காசாவுக்கான தரைவழி உணவு விநியோகங்களை இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவுக்கு தட்டுப்பாடு நீடிப்பதோடு ஊட்டச்சத்து குறைபாட்டால் இதுவரை 27 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு 31,341 உயர்வு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக வபா செய்தி நிறுவனம் கூறியது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கு அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவின் கிர்பட் அல் அதால் கிராமத்தில் பொதுமக்கள் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவின் அல் புரைஜ் அகதி முகாமில் உள்ள அல் அத்தார் குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 69 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,341 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,134 பேர் காயமடைந்துள்ளனர்.

எகிப்து எல்லையை ஒட்டியுள்ள ரபா பகுதி மாத்திரமே காசாவில் இன்னும் இஸ்ரேல் தரைப்படை நுழையாத இடமாக உள்ளது. எனினும் அங்கு படை நடவடிக்கையை மேற்கொள்வது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறிவருகின்றபோதும் அதற்கு இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இதேவேளை காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கிழக்கு ஜெரூசலம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகளால் 433 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக ரமல்லாவில் உள்ள பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பிரிவில் மேலும் சுமார் 4,700 பேர் காயமடைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மேற்குக் கரையில் 171 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை விடவும் கடந்த ஐந்து மாதங்களில் மிக அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்ட அந்த அமைச்சு, இரண்டாவது இன்திபாதா போராட்டம் வெடித்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஓர் ஆண்டில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கையானவர்களாக இது இருப்பதாகவும் அந்த அமைச்சு கூறியது.

இந்நிலையில் பலஸ்தீன அதிகாரசபையின் புதிய பிரதமராக முஹமது முஸ்தபாவை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நியமிக்க ஏற்பாடாகி இருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT