Home » சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; மார்ச் 19, 20 விவாதம்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; மார்ச் 19, 20 விவாதம்

- பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முக்கிய தீர்மானம்

by Prashahini
March 15, 2024 7:18 am 0 comment

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை மற்றும் 20ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் தலைமையில் நேற்று (14) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, மார்ச் 19ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும், 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறவுள்ளது. இரண்டாவது நாளான 20ஆம் திகதி பி.ப 4.30 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரரணை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

மார்ச் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கருணாரத்ன, பந்துல பஸ்நாயக்க மற்றும் (வைத்தியகலாநிதி) பி.எம்.பி.சிறில் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணையை எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT