Monday, May 20, 2024
Home » அமைதியான ஒரு கொலைகாரன்!

அமைதியான ஒரு கொலைகாரன்!

by Rizwan Segu Mohideen
March 15, 2024 6:27 am 0 comment

தெற்காசிய நாடுகளை எடுத்துக் கொண்டால் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர்களின் வீதம் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தகவலலொன்றைத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் உண்மையிலேயே அதிர்ச்சி தருவதாகும்.

இயந்திரமயமான வாழ்க்கை முறை, மனஅழுத்தம், உணவுப் பழக்கங்கள், பரம்பரை இயல்பு போன்ற பல்வேறான காரணிகளால் நீரிழிவு வியாதி ஏற்படுகின்றது. அதுவும் தெற்காசிய நாடுகளில் வாழும் மக்கள் மத்தியிலேயே நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்நாடுகளில் வாழ்கின்ற மக்களின் உணவுப் பழக்கமும் நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணியாகின்றது.

நீரிழிவு நோயை ‘அமைதியான கொலைகாரன்’ என்று மருத்துவ உலகம் கூறுகின்றது. அதாவது ஒருவரின் உடலில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை அதிகம் காண முடியாது. அந்நோய் ஒருவரின் உடலில் அமைதியான முறையில் நீண்ட காலம் இருந்து கொண்டு, எதிர்காலத்தில் திடீரென்று பாதிப்பை வெளிப்படுத்துகின்றது.

நீரிழிவின் நீண்டகாலப் பாதிப்பு மிகவும் பாரதூரமானது. அந்நோயானது உடலில் நீண்ட காலம் அமைதியாக இருந்து விட்டு இறுதியில் ஒருவரின் உடல்நிலையையே மோசமான நிலைமைக்குக் கொண்டு வந்து விடுகின்றது. கண்பார்வைக் கோளாறு, இருதயத் தாக்கம், ஆறாத கால்புண்கள், நரம்புக் கோளாறுகள், சிறுநீரக செயலிழப்பு என்றெல்லாம் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது நீரிழிவு வியாதி.

நீரிழிவை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் உணவுக் கட்டுப்பாடு, மருந்துகள், உடற்பயிற்சி போன்றவற்றுடன் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வியாதியைக் கண்டறியாமல் அலட்சியத்துடன் இருப்பவர்களே இறுதியில் பாரதூரமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நீரிழிவை அலட்சியம் செய்ததன் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதையும் இவ்விடத்தில் எச்சரிக்ைகயுடன் கூற வேண்டியுள்ளது.

எனவே நீரிழிவு குறித்த அவதானமே இங்கு அவசியமாகின்றது. நீரிழிவு நோய்க்கான சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகள் தொடர்பான அவசியமும் மக்களுக்கு அவசியமாகின்றது. ஆரம்பநிலையிலேயே அந்நோயைக் கண்டுபிடித்து பொருத்தமான மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளின் பலனாக தொண்ணூறு வயதுக்கு மேலும் உயிர்வாழ்ந்துள்ளனர் என்பதை நினைவிற் கொள்வது அவசியம்.

எமது உடலின் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாவதுதான் நீரிழிவு நோய். இதற்குக் காரணம் இன்சுலின் சரியான அளவு உற்பத்தி ஆகாதது அல்லது உற்பத்தியான இன்சுலினை சரியான அளவு பயன்படுத்த முடியாதது.

நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ​ேஹார்மோன் சுரக்கிறது. இது நாம் உண்ணும் உணவில் உள்ள சீனியை கொழுப்பாகவும், கிளைகோஜென்னாகவும் சேமித்து வைக்க உதவுகிறது. நாம் உண்ணுகின்ற உணவின் அளவுக்குத் தக்கவாறு இன்சுலின் தானாகவே சுரந்து இந்தப் பணியைச் செய்கிறது.

பல்வேறு காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சீனியானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்தத்தில் நேரடியாகக் கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்கிறது. அது 180 மில்லிகிராம் சதவீதத்தைத் தாண்டும் போது சிறுநீரிலும் சீனி வெளியாகிறது. இதையே நீரிழிவு நோய் என்கிறோம்.

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் அதிக சீனியே தவிர சிறுநீரில் அல்ல. இதனால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் பார்வை இழப்பு, பக்கவாதம், கால் இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்றவையாகும் என்பதை உணர்ந்து கொண்டு அவதானமாக இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயானது உடல் உறுப்புக்களை எந்த அறிகுறிகளும் இல்லாமல் மெதுவாக பாதிக்கும். இரத்தக் குழாய்களில் படியும் சீனியானது மாரடைப்பு, கண், கால், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் பார்வை பறிபோகும் அபாயமும் ஏற்படும்.

மாரடைப்புக்கான முக்கிய காரணிகளுள் நீரிழிவு நோயும் ஒன்று. கால் நரம்புகள் மோசமாக பாதிக்கப்படுவதால் பலருக்கு கால்களையோ, கால்விரலையோ அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்புகளுக்குச் சிகிச்சை செய்ய தேவைப்படும் மருத்துவ செலவுகள் மிகவும் அதிகம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முடிந்தவரை நீரிழிவு நோய் வராமல் தடுப்பதும், அப்படியே வந்துவிட்டாலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் இன்றியமையாதது.

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் வீதம் அதிகரித்துச் செல்வதனால் மக்கள் அனைவரும் இவ்விடத்தில் மிகவும் அவதானம் பேணுவது அவசியமாகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT