Wednesday, May 8, 2024
Home » தாயகம் மீதான பற்றுதல் ஊடகங்களுக்கு அவசியம்

தாயகம் மீதான பற்றுதல் ஊடகங்களுக்கு அவசியம்

by manjula
March 12, 2024 6:00 am 0 comment

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது படிப்படியாகச் சீரடைந்து வருகின்றது. கொவிட் தொற்று மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அதலபாதாளத்துக்குள் வீழ்ந்திருந்த பொருளாதாரம் தற்போதுதான் படிப்படியாகச் சீரடைந்து வருவதாக பொருளாதாரம் தொடர்பான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாடு முழுமையாக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து சீரடைவதற்கு சிறிது காலம் செல்லுமென்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.

நாட்டின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பயனாக இலங்கையின் பொருளாதாரம் எதிர்காலத்தில் சீரடைந்து விடுமென்றே நம்பப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்ட கால அரசியல் அனுபவம், ஆளுமை, ஆற்றல், சர்வதேசத்துடனான நெருக்கம் போன்றவை காரணமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு விரைவாக மீட்சி பெற்று வருகின்றது.

நாட்டு மக்களுக்கு இன்றைய நிலையில் அவசியமானது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதேயாகும். நாட்டின் பொருளாதார நெருக்கடி விரைவில் தீர வேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சிறப்பான திட்டங்களே இதற்குக் காரணமென்று மக்கள் நம்புகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்கையில், நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக எதிரணியினர் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறி வருகின்றனர். நாட்டு மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை எதிரணியினர் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைப் பெரிதுபடுத்தி, எமது இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதை அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர். இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதை ஊக்குவித்து, அரசுக்குச் சங்கடத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கம் ஆகும்.

அதேசமயம், நாட்டின் இளவயதினர் பலர் சமீப காலமாக வெளிநாடுகளுக்குச் செல்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நாட்டின் அனைத்து இளைஞர், யுவதிகளுமே வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த விடயத்தில் சில ஊடகங்கள் அதீதமான முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்து வருவதையே அவதானிக்க முடிகின்றது. எமது நாட்டு இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் ஆர்வம் காண்பிப்பதென்பது புதிதான விடயமல்ல. வெளிநாடுகளுக்குத் தொழில்வாய்ப்புத் தேடிச் செல்வதும், அங்கு புலம்பெயர்ந்து சென்று வாழ விரும்புவதும் அக்காலத்தில் இருந்தே நாம் அறிந்து வருகின்ற விடயங்களாகும்.

அதிக சம்பளம் மற்றும் வசதியான வாழ்க்கை போன்ற எதிர்பார்ப்புகளுக்காக வெளிநாடுகளை நோக்கி எமது மக்கள் புலம்பெயர்வதென்பது அக்காலத்தில் இருந்தே இடம்பெற்று வருகின்றது. 1983 வன்செயலைத் தொடர்ந்து ஆரம்பமான புலம்பெயர்வு தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றது. புலம்பெயர்வும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் எமது நாட்டு மக்களுக்கு புதிதான விடயங்களல்ல.

இவ்வாறிருக்கையில், தற்போது இளவயதினர் பலர் வெளிநாடு செல்வதில் ஆர்வம் காண்பித்து வருவது குறித்து ஒருசில ஊடகங்கள் கூடுதலான முக்கியத்துவமளித்து செய்திகளை வெளியிட்டு வருவது திட்டமிட்ட செயலென்றே எண்ணத் தோன்றுகின்றது.

எமது நாட்டின் சில ஊடகங்கள் அரசுக்கு விரோதமான செய்திகளையே வெளியிட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அரசாங்கத்தை வசைபாடுவதும், எதிரணியினரின் புகழ் பாடுவதும் அந்த ஊடகங்களின் செயற்பாடுகளாகிப் போயுள்ளன. எமது நாட்டு இளைஞர், யுவதிகள் வெளிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுவதாக வெளியிடப்படுகின்ற செய்திகளும் அவ்வாறானவைதான்.

எமது அரசியல்வாதிகள் பலர் சுயநல சுபாவம் மிக்கவர்கள். நாட்டின் எதிர்கால நலன் குறித்த அக்கறை அரசியல்வாதிகள் பலரிடம் கிடையாது.

தத்தமது அரசியல் நலனும் எதிர்கால கனவுகளுமே அவர்களுக்கு முக்கியமானவையாகும். அவர்களது அவ்வாறான சுயநலன் காரணமாகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுடன், நாட்டின் இனஐக்கியமும் சீர்குலைந்து போயுள்ளது. ஆகவேதான் எமது நாட்டு இளைஞர், யுவதிகள் பலரிடம் நாட்டின் அரசியல் மீது வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டுள்ளனவென்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும் எமது மக்கள் அனைவரும் தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். வெளிநாட்டில் வாழ்கின்ற இலங்கையர்கள் அனைவருமே தங்களது தாயகம் மீது பற்றுக் கொண்டவர்களாவர். தாயகப்பற்று ஊடகங்களுக்கும் உண்டென்பதை மறந்து விடலாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT