Thursday, May 9, 2024
Home » ஜனாதிபதித் தேர்தலையே நடத்த வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலையே நடத்த வேண்டும்

- ராஜபக்‌ஷ ஒருவர் தேர்தலில் நிற்பது சாத்தியமில்லை

by Rizwan Segu Mohideen
March 5, 2024 11:28 am 0 comment

– பாராளுமன்றம் செல்ல எண்ணம் இல்லை
– அமெரிக்காவிலிருந்து திரும்பிய பசில் தெரிவிப்பு

உத்தியோகபூவர்மான  அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாக பசில் ராபஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை நாடு திரும்பிய வேவளையில் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்தால் தாம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர எண்ணம் இல்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தால் தேர்தலை நடாத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலுள்ள தனது பிள்ளைகளுடன் விடுமுறையை செலவிட்ட அவர், சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 650 இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தாம் வழக்கமாக, பிள்ளைகளுடன் தங்குவதற்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வதாகவும் ஓரிரு மாதங்கள் அவர்களுடன் அங்கு தங்கியிருந்த பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரவுள்ளது, பொதுத் தேர்தல்தான் எனவும் அத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவதற்காகவே பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வரவுள்ளதாக, ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அவர், எந்தவொரு தேர்தல் வந்தாலும் தாம் அதற்கான ஒழுங்குகளை செய்வேன் என குறிப்பிட்டார்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் அது பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன்தான் வருவார் என அவர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

மொட்டு கட்சி பலமாக உள்ளதா?
ஆம் அதனால்தானே நாம் கடந்த 3 தேர்தல்களையும் வென்றிருந்தோம் என குறிப்பிட்டார்.

தற்போது மொட்டு கட்சி பல கூறுகளாக பிரிந்துள்ளதே?
அரசியல் என்றால் பிரிவது பின்னர் சேர்வது சகஜம்தான் என குறிப்பிட்டார்.

நீங்கள் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கா முயற்சி செய்கிறீர்கள்?
இல்லை. நாம் ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. மக்கள் சொல்வதைத் தான் நாம் மேற்கொள்கின்றோம். ஒரு சில வேளைகளில் எமது முடிவுகள் பிழைத்துப் போயுள்ளன. மக்கள் நாம் சொல்வதை ஏற்பதில்லை. சில வேளைகளில் மக்கள் சொல்வதை நாம் கேட்பதில்லை போன்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவிற்கு எதிர்வரும் தேர்தல் சவாலானது என நீங்கள் ஏற்கின்றீர்களா?
ஆம். எப்போதும் அனைத்து தேர்தல்களும் சவாலானது தான்.

ஜனாதிபதித் தேர்தலில், மொட்டு கட்சி வேட்பாளரை நிறுத்துமா, வேட்பாளர் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்குமா?
அது தொடர்பில் நாம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எமது அரசியல் சபை கூடி, எமது தலைவரினதும், தொண்டர்களினதும் ஆலோசனைகளை பெற்று எதிர்வரும் சில நாட்களில் நாம் முடிவெடுப்போம். கலக்கமடைய வேண்டியதில்லை.

எதிர்வரும் தேர்தலில் ராஜபக்ஷ ஒருவரா போட்டியிடுவார்?
அதுவும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது அவ்வாறு அமையுமென நாம் நம்பவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT