Home » வலிப்புநோய் சிகிச்சை நிலையத்தை மதிப்பீடு செய்ய சவூதி அபிவிருத்தி (SFD) நிதிய பிரதிநிதிகள் வருகை

வலிப்புநோய் சிகிச்சை நிலையத்தை மதிப்பீடு செய்ய சவூதி அபிவிருத்தி (SFD) நிதிய பிரதிநிதிகள் வருகை

by Rizwan Segu Mohideen
March 4, 2024 11:26 am 0 comment

சவூதி அரேபிய நிதியத்தின் நிதியுதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கை கால் வலிப்பு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 8 மாடிக்கட்டடமொன்று 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைப் பார்வையிட சவூதி அரேபிய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தது. இந்தக் குழுவினர் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்- கஹ்தானியை கடந்த 27 ஆம் திகதி சந்தித்தனர்.

இச்சிகிச்சை நிலையத்தின் கட்டடத்துக்கான மொத்த தொகையான 75 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 32 மில்லியன் டொலர் சவூதி நிதியத்தின் மூலம் பெறப்பட்டதாகும். இலங்கை சுகாதாரத் துறையின் கால் கை வலிப்பு தொடர்பான சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி நிதியத்தின் பிரதிநிதிகளின் விஜயம் அமைந்துள்ளது.

கட்டில்களுடன் கூடிய 242 அறைகளைக் கொண்ட இக்கட்டடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைந்திருக்கும் இந்த சிகிச்சை நிலையத்தினூடாக மக்கள் பெரிதும் நன்மையடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கையிலிருந்து 1000 தாதியர்களை இணைத்துக் கொள்வதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. இதற்காக தெரிவும் அண்மையில் நடைபெற்றது. இதில் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் தாதியர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அமைச்சு அதிகாரிகள் தீவான் முகவர் நிலையம் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களை நேரில் கண்காணித்தார்.

முதல் சுற்றில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டனர்.

தாதியர் டிப்ளோமா பெற்றவர்கள் இரண்டாவது சுற்றில், தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுவார்கள் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சுகாதாரத் துறையில் மாத்திரமன்றி மேலும் பல துறைகளிலும் சவூதி அரேபியா தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறது. பாதைகள் அபிவிருத்தி, குடிநீர் திட்டம் போன்ற பாரிய திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் பல்துறை சார்ந்தவர்களை இணைத்து இரு நாடுகளும் நன்மையடையும் விதத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக சவூதி அரேபிய தூதரகத்தின் உத்தியோகபூர்வ X (டுவிட்டர்) பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எச். பௌஸுல் அலவி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT