Sunday, May 19, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
March 4, 2024 11:19 am 0 comment

இங்ஙனநிகழுநாளிலே, திருநனிபள்ளியிற் பிராமணர்கள் பிள்ளையாரை வணங்கி “அடியேங்களெல்லாரும் உய்யும்படி திருவவதாரஞ் செய்தருளிய பரமகிருபாலுவாகிய சிவாமி! அடியேங்களுடைய வாசஸ்தானமாகிய திருநனிபள்ளியில் வீற்றிருக்குஞ் சிவபெருமானை வணங்கும்பொருட்டு அவ்விடத்திற்கு எழுந்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். சிவானுபூதிப் பெருவாழ்வாகிய பிள்ளையார் அதற்கு இசைந்து; தோணியப்பரை வணங்கி, அருள்பெற்று, பிறதலங்களையும் வணங்கச் சென்றார். செந்தாமரை மலரினுஞ் சிறந்த அருமைத்திருவடிகள் தரையின் மேற் செல்வதையும் பிறரொருவர் தாங்குவதையும் பொறாத அன்பினையுடைய சிவபாதவிருதயர் வந்து எடுத்துத் தோளின் மேலே வைத்துக்கொண்டு சென்றார். திருநனிபள்ளிக்குச் சமீபித்த பொழுது, பிள்ளையார் “அந்தச் சோலை தோன்றும் பதி யாது” என்று வினவியருள; தந்தையார் “திருநனிபள்ளி” என்றார். அதுகேட்டு, திருப்பதிகம் பாடிக்கொண்டு திருக்கோயிலை அடைந்து சுவாமியை வணங்கிக் கொண்டு, அந்தஸ்தலத்தில் இருந்தார். பின் அவ்விடத்தினின்று நீங்கி, தலைச்சங்காடு, திருவலம்புரம், பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் என்னுந் தலங்களுக்குப் போய்ச் சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டு, மீண்டு சீர்காழியை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். இருக்கு நாளிலே, திருமயேந்திரப்பள்ளி, திருக்குருகாவூர் முதலிய ஸ்தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடினார்.

இப்படி நிகழும்காலத்திலே, திருநீலகண்டபெரும்பாணர் ஆளுடையபிள்ளையாரைத் தரிசிக்கும்பொருட்டு, விறலியாரோடு யாழ்கொண்டு சீர்காழியிலே வந்து சேர்ந்தார். பிள்ளையார் அவருடைய வரவை அறிந்து, இவரை எதிர்கொள்ள; அவர் பிள்ளையாருடைய திருவடிகளை நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ் செய்தார். பிள்ளையார் அவரை அழைத்துக் கொண்டு, திருக்கோயிற் புறமுன்றிலே சென்று கும்பிடுவித்து, அவரை நோக்கி, “நீர் இங்கே சுவாமிக்கு யாழ் வாசியும்” என்றார்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT