Home » அரச நிறுவனங்களை மேம்படுத்திய பொருளாதார வேலைத் திட்டங்கள்

அரச நிறுவனங்களை மேம்படுத்திய பொருளாதார வேலைத் திட்டங்கள்

by manjula
February 29, 2024 8:30 am 0 comment

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார வேலைத்திட்டங்கள் நம்பிக்கை தரும் பிரதிபலன்களை தரக்கூடியனவாக உள்ளன. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இந்நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு இப்பொருளாதாரத் திட்டங்கள் பாரிய பங்களிப்பை நல்கியுள்ளன. அதன் பயனாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் இந்நாட்டு மக்கள் முகம்கொடுத்த அசௌகரியங்களும் அழுத்தங்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன.

2022 ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அதனைத் தொடர்ந்து மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அதன் பிரதிபலனாக பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் நாடும் மக்களும் முகம்கொடுத்த அசௌகரிங்களும் நெருக்கடிகளும் குறுகிய காலப்பகுதி முதல் கட்டம்கட்டமாக அகலத் தொடங்கின.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நாட்கணக்கில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை மாத்திரமல்லாமல் அன்றாட மின்வெட்டும் கூட முடிவுக்கு வந்தது. வங்குரோத்து நிலைக்கு உள்ளாகி இருந்த நாட்டில் இப்பொருளாதார வே​லைத்திட்டங்கள் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்தன.

அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்த மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் கிடைக்கப்பெறவும் இப்பொருளாதார வேலைத்திட்டங்களே வழிவகை செய்தன. குறிப்பாக இந்நாட்டுக்கு 2022 இல் வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 2023 இல் இருமடங்காக அதிகரிப்பதற்கும் இப்பொருளாதாரத் திட்டமே அடித்தளமானது.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கவும் இத்திட்டங்கள் பெரிதும் உதவியுள்ளன.

இவ்வாறான சூழலில், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ‘2022 இல் 743 பில்லியன் ரூபா நஷ்டத்திற்கு உள்ளான 52 அரச நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் 313 பில்லியன் ரூபா இலாபம் பெற்றுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் பல அரச நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. தம் ஊழியர்களுக்கு மேலதிக வேலைநேரக் கொடுப்பனவையோ, வாழ்க்கைச் செலவுப்படி உள்ளிட்ட மேலதிக அலவன்சுகளையோ வழங்க முடியாத நிலைக்கு உள்ளான சில நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்துடன் ஊழியர்களை வீடுகளில் இருக்கவும் அனுமதி அளித்தன. மேலும் சில நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரமே வழங்கியதோடு, இன்னும் சில அரச நிறுவனங்கள் அடிப்படைச் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத நிலைக்கு உள்ளாகின.

இந்நிலையில் அரச ஊழியர்கள் சம்பளம் அற்ற விடுமுறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறான நெருக்கடிகள் தற்போது பெரும்பாலும் நீங்கியுள்ளன. ​இதற்கு கடந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் இந்த அரச நிறுவனங்கள் 313 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டி இருப்பதும் நல்ல உதாரணமாகும். இது நாட்டையும் மக்களையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திடட்டங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியும் பிரதிபலனும் ஆகும்.

இந்நாட்டில் புதிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட இப்பொருளாதார வேலைத்திட்டம் அடித்தளமிட்டுள்ளது. அந்த வகையில் அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இப்பொருளாதார வேலைத்திட்டங்கள் அமைந்திருப்பதையே இந்த அடைவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அதனால் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட இப்பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும் ஆகும். கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாடு மீட்சி பெற்று மறுமலர்ச்சிப் பாதையில் பயணிக்க வித்தூன்றிய இப்பொருளாதார வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவையை நாடும் உணர்ந்துள்ளது.

ஆகவே நாட்டினதும் மக்களினதும் நலன்களை அடிப்படையாகக் கொண்ட இப்பொருளாதார வேலைத்திட்டங்களுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் வளமான பொருளாதார வாழ்வைப் பெற்றுக்கொள்ள அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாக அது அமையும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT