Saturday, April 27, 2024
Home » வேகமாக பரவி வரும் ‘Zombie Deer Disease’

வேகமாக பரவி வரும் ‘Zombie Deer Disease’

- மனிதர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

by Prashahini
February 21, 2024 12:45 pm 0 comment

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மான்களுக்கு ‘ஜாம்பி மான் நோய்’ என அழைக்கப்படும் (Zombie Deer Disease) தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுநோய் மனிதர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.

ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய் ஒரு நாள்பட்ட விரயம் நோய் (chronic wasting disease). நரம்பியல் தொற்று நோயான இது, விலங்குகளை பாதித்து கொல்லும் தன்மை கொண்டது.

சரியான முறையில் ஒன்று சேராத பிரோடின்கள் (Proteins) பிரியான்ஸ் (prions) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரியான்ஸ், தொற்றாக மாறும் நிலையில், நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளை மற்றும் பிற உறுப்புகளில் நிலைகொள்கிறது.

இதன் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஜாம்பி போன்று உடல் செயல்பட தொடங்கும். எச்சில் வடிதல், தடுமாறுதல், சோம்பல் மற்றும் வெற்றுப் பார்வை போன்றவை இந்த தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த தொற்று தற்போது அமெரிக்காவில் உள்ள மான்களை பெருமளவு பாதித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நோய்க்கு ஜாம்பி மான் நோய் என்ற பெயர் வந்துள்ளது.

கனடாவில் சஸ்காட்செவன், ஆல்பர்ட்டா மற்றும் கியூபெக் ஆகிய இடங்களில் உள்ள மான்கள் மற்றும் மனிடோபா பகுதியில் இருக்கும் காட்டு மான்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதலில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மான்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடமான், எல்க் மற்றும் கரிபோ ஆகிய விலங்குகளிலும் தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நோயின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலை வழங்கியுள்ளார். கனடா சுகாதார பிரிவு அதிகாரிகள், ஜாம்பி மான் நோய் மனிதர்களுக்கு பரவும் என்று கூறுவதற்கு சரியான ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், கால்கேரி பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஹெர்மன் ஷாட்ஸ்ல் என்றவர் நடத்திய முந்தைய ஆராய்ச்சியில் இந்த வகை தொற்றுகள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

அதில், அவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் படி, விலங்குகளிடம் இருந்து தொற்றுகள் பரிமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விலங்கு கறிகளை உட்கொள்ளுவதால், இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT