Sunday, April 28, 2024
Home » வடமேல் மாகாணத்தில் ஐ.தே. கட்சியின் அடையாளம் காமினி ஜயவிக்கிரம பெரேரா

வடமேல் மாகாணத்தில் ஐ.தே. கட்சியின் அடையாளம் காமினி ஜயவிக்கிரம பெரேரா

by sachintha
February 20, 2024 5:50 am 0 comment

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கிய காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தில், மாகாணசபை முறை நிறுவப்பட்டதன் பின்னர் நடந்த முதல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். வடமேற்கு மாகாணத்தில் மே 4, 1988 முதல் ஒக்டோபர் 19, 1993 வரை அவர் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

அந்தக் காலப்பகுதியில் அவர் எடுத்த சிறந்த முடிவுகளினால் வடமேற்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடையாளமாக ஜயவிக்கிரம என்ற நாமம் அமைந்தது.

அவர் 1941 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தின் சத்கோரளை கட்டுவெல்லேகம மற்றும் கிரிஉல்ல என்பவற்றில் வசித்த பௌலிஸ் பெரேரா மற்றும் சோமா பெரேரா தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1968 இல் அவர் தீவிர அரசியலில் குதித்தார்.

1977 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் இடதுசாரி கோட்டையாக இருந்த கட்டுகம்பொல தொகுதியில் அதிகூடிய வாக்குகளான 23,475 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

1977 ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான இவர், 1994 முதல் 2020 வரை நடைபெற்ற அனைத்து பொதுத்தேர்தல்களிலும் போட்டியிட்டு 08 ஆவது பாராளுமன்ற அமர்வு வரை தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.

2001 டிசம்பர் 2003 நவம்பர் மாதம் வரை நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சராகவும், 2015 ஜனவரி முதல் 2005 ஓகஸ்ட் வரை உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும், 2015 செப்டம்பர் முதல் 2018 பெப்ரவரி வரை நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார். 2017 ஓகஸ்ட் முதல் 2018 ஒக்டோபர் வரை புத்த சாசன அமைச்சராக மக்களுக்கு சேவையாற்றிய அவரை, மக்கள் இன்றும் மிகுந்த அன்புடனும் இதயப்பூர்வமான மரியாதையுடனும் நினைவுகூருகிறார்கள்.

பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்த அவர், எந்த அமைச்சராக இருந்தாலும் தனது சேவையை இயன்றவரை சிறப்பாக மேற்கொண்டு நாட்டுத் தலைவர்களால் பாராட்டப்பட்டிருக்கிறார். புத்தசாசன அமைச்சின் ‘புத்தபுட் சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் ஊடாக பிக்குமார்களும் அவர்களின் பெற்றோர்களும் விலைமதிப்பற்ற நன்மைகளைப் பெற்றனர்.

2013ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராகக் கடமையாற்றிய காமினி ஜயவிக்கிரம பெரேரா, கட்சிக்காக பெரும் சேவையாற்றியுள்ளார். வெற்றி தோல்வியை கண்டு அவர் ஒருபோதும் கட்சியை விட்டு விலகவில்லை. சவால்கள் எழுகின்ற போதெல்லாம் கட்சித் தலைமையுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்ப்பது அவரது பழக்கமாக இருந்தது. பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த அவர், ஐ.தே. கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களில் முக்கிய பங்காற்றினார்.

இளம் பாராளுமன்ற உறுப்பினராக, ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் உள்ளத்தைக் கவர்ந்த இவர் சிறந்த திறமைசாலியாக இருந்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியில் பயின்ற அவர் தனது பாடசாலை நாட்களில் திறமையான துடுப்பாட்ட வீரராக இருந்தார். கல்லூரியின் முதல்தர கிரிக்கெட் அணியில் உறுப்பினராக இருந்த அவர், 1960 ஆம் ஆண்டு அணியின் தலைவராக செயற்பட்டார்.

தமது பிரதேசத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பங்காற்றிய அவர், பல்லாயிரம் தொழில் வல்லுநர்களை உருவாக்கப் பங்காற்றினார்.

அந்நாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் டி. பி. விஜேதுங்க நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐ.தே.க தலைவராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுடன் ஜெயவிக்ரம பெரேரா நம்பிக்கையான உறவைப் பேணி வந்தார். கட்சித் தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்ற காலப்பகுதியில், ஐ.தே.க பெருமளவு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருந்தது. ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் புலிகளினால் கொல்லப்பட்டனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் நிபந்தனையற்ற வகையில் கட்சியைக் கட்டியெழுப்ப ரணில் விக்கிரமசிங்கவுடன் பல தியாகங்களைச் செய்த நம்பகமான அரசியல் தலைவர்களில் முன்னணியில் இருந்தவர் ஜயவிக்கிரம பெரேரா.

1994ஆம் ஆண்டில் ஐ.தே.கவை படிப்படியாக மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெளியில் இருந்து வந்த சவால்களை விட கட்சிக்குள் இருந்து வந்த சவால்களை சமாளிக்க அதிக நேரத்தையும் உழைப்பையும் செலவிட வேண்டியிருந்தது. அந்தச் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் தலைமைத்துவத்திற்கு அசைக்க முடியாத சக்தியாக இருந்தார் இவர்.

இளம் பாராளுமன்ற உறுப்பினராக அவர் கட்டுகம்பொல தொகுதிக்கு ஆற்றிய அளப்பரிய சேவை என்றும் மறக்க முடியாதவை.

வடமேல் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளின் கீழ் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். வடமேல் மாகாணத்திற்கு புதிய கருத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தி, வடமேற்கு ஜனகலா கேந்திரத்தை நிறுவி, பாரம்பரிய கைவினை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. வடமேல் மாகாணத்தில் மரநடுகை நிகழ்ச்சிகளின் மூலம் வீதிகளின் இருபுறமும் நடப்பட்ட மரங்கள் தற்போது வீதியின் இருபுறமும் நிழல் கொடுத்து வருகின்றன.

மரமுந்திரி கிராமங்கள், மாம்பழக் கிராமங்கள் மற்றும் ஆடுவளர்ப்புக் கிராமங்கள் உள்ளிட்ட திட்டங்களை பின்தங்கிய கிராமங்களில் இவர் ஆரம்பித்ததோடு இன்றும் அந்த கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதார வழிகளாக மாறியுள்ளன.

வடமேல் கைத்தொழில் சேவைப் பணியகம் காமினி ஜயவிக்ரம பெரேராவினால்தான் நிறுவப்பட்டது. வடமேல் மாகாண மக்களுக்கு உண்மையாக சேவையாற்றிய ஒரு முன்மாதிரியான தலைவரான காமினி ஜயவிக்ரம பெரேரா காணப்பட்டார். ஜக்கிய தேசியக் கட்சி எனும் பாரிய விருட்சத்தின் ஊடாக தனது கட்சி உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஜயவிக்கிரம பெரேரா எனும் நாமம் என்றும் அழியாது.

அகில விராஜ் காரியவசம்

(ஐக்கிய தேசிய கட்சி உபதலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT