Friday, May 3, 2024
Home » மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பதன் முக்கியத்துவம்

மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பதன் முக்கியத்துவம்

by sachintha
February 20, 2024 6:00 am 0 comment

இலங்கை மின்சார சபை முக்கியமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ‘நாட்டில் வரட்சிக் காலநிலை நிலவுவதால் நீர் மின்னுற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் மின்சாரத்தை பொதுமக்கள் சிக்கனமாகப் பாவிக்க வேண்டும்’ என்று அச்சபை கேட்டுள்ளது.

இந்த வேண்டுகோள் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தலாம். தொடரான மழைவீழ்ச்சிக் காலநிலை நீங்கி சில வாரங்கள்தான் கடந்திருக்கின்றது. அதற்கிடையில் நீர் மின்னுற்பத்தியைப் பாதிக்கக் கூடியளவுக்கு வரட்சி ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடே இந்த வேண்டுகோளாகும்.

இந்நாடு கடந்த நான்கைந்து மாதங்களாக கடும் மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொண்டது. அதன் ஊடாக நீர்த்தேக்கங்கள், குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நிரம்பி வழிந்தன. மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்கள் தத்தம் கொள்ளளவுக்கு மேலதிகமான நீரை அவ்வப்போது வான்கதவுகளைத் திறந்து வெளியேற்றின.

மேலும் இம்மழை வீழ்ச்சியினால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஆங்காங்கே ஏற்பட்டது. உணவு உற்பத்தி பயிர்ச்செய்கைகளில் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டன. நாட்டில் நீடித்த மழையுடன் கூடிய காலநிலையின் தாக்கங்கள் இவ்வாறு காணப்பட்டன.

அதேநேரம் இம்மழைவீழ்ச்சிக் காலநிலைக்கு முன்னர் நாட்டில் கடும் வரட்சி நிலவியது. அதன் விளைவாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்ததோடு வனஜீவராசிகள் கூட தண்ணீர் தேடி அலையும் நிலை உருவாகி இருந்ததும் உணவுப் பயிர்ச்செய்கைகள் அழிவுற்றதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். அச்சமயம் தண்ணீரின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட்டிருந்தது.

அவ்வாறான கடும் வரட்சிக் காலநிலையைத் தொடர்ந்து நாட்டில் மழையுடனான காலநிலை கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமானது. அந்த மழைவீழ்ச்சிக் காலநிலை சுமார் நான்கைந்து மாதங்கள்​ நீடித்தது. அக்காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற மழைநீரின் பெரும்பகுதி எவ்விதப் பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படவுமில்லை, சேமிக்கப்படவும் இல்லை. மாறாக அந்த மழைநீரின் ஆனால் எவ்விதப் பயன்பாட்டுக்கும் உட்படுத்தப்படாத நிலையில் மழைநீரின் பெரும்பகுதி கடலில் கலப்பதைக் கண்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த பலரும் கவலை அடைந்திருந்தனர்.

ஆனால் இம்மழைவீழ்ச்சி காலநிலை ஆரம்பமாவதற்கு முன்னரான வரட்சி காலநிலையில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலமாவது மழைநீரைச் சேமிப்பது குறித்து கவனம் செலுத்தி இருக்கலாம். அதுதான் துறைசார் நிபுணர்களின் கருத்தாகும். அதுவும் நடக்கவில்லை.

ஆனால் நான்கைந்து மாதங்களாகக் கிடைக்கப்பெற்று வந்த கடும் மழைவீழ்ச்சி முற்றுப்பெற்று சில வாரங்கள்தான் கடந்திருக்கிறது. அதற்கிடையில் இலங்கை மின்சார சபை, நாட்டில் வரட்சியான காலநிலை தொடர்வதால் நீர் மின்னுற்பத்தி 20 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வரட்சி காலநிலையின் தாக்கத்தைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

தற்போது மின்சார சபை இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ள போதிலும் எதிர்வரும் நாட்களில் விவசாயத் துறையினர் உள்ளிட்ட ஏனைய துறையினரும் தண்ணீரின் தேவை குறித்து குரல் எழுப்பும் நிலை ஏற்பட முடியும். அதனால் வரட்சியின் தாக்கத்தையும் பாதிப்புக்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.

வரட்சிக் காலநிலைக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ப மழைவீழ்ச்சி காலத்தில் கிடைக்கப்பெறும் மழைநீரை சேமித்து கொள்வதில் இனிமேலாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக வரட்சி காலநிலையின் தாக்கங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதேநேரம் மின்சார சபையின் வேண்டுகோள் குறித்து மின்பாவனையாளர்கள் கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளவும் கூடாது. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பாவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது அதிக உஷ்ண காலமாகக் காணப்படுகின்ற போதிலும் மின்பாவனையில் சிக்கனம் இன்றியமையாததாகும். மின்சாரம் எந்தவிதத்திலும் வீண்விரயமாக்கப்பட இடமளிக்கலாகாது. அது மின்வெட்டுக்கு வழிவகுக்கும். அதன் விளைவாக உற்பத்தித்துறை உள்ளிட்ட பல துறைகளிலும் தாக்கங்களும் பாதிப்புக்களும் கூட ஏற்படும்.

ஆகவே மின்சாரம் வீண் விரயமடைய இடமளிக்காது சிக்கனமாக பாவிப்பதில் பாவனையாளர்கள் அக்கறை கொள்ள வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT