Sunday, April 28, 2024
Home » துண்டுதுண்டாக உடைந்து சிதறுண்டு போனது பா.ஜ.கவை எதிர்த்து நின்ற ‘இந்தியா’ கூட்டணி!

துண்டுதுண்டாக உடைந்து சிதறுண்டு போனது பா.ஜ.கவை எதிர்த்து நின்ற ‘இந்தியா’ கூட்டணி!

பா.ஜ.கவுடன் இணையத் தயாராகிறார் பரூக் அப்துல்லா! அண்ணா தி.மு.கவையும் மீண்டும் பா.ஜ.க அணிக்கு கொண்டுவருவதற்கு தீவிர முயற்சிகள்!

by gayan
February 17, 2024 7:00 am 0 comment
  • பிரதமர் நரேந்திர மோடியின் அரசை எதிர்க்கும் பலத்தை இழந்து நிற்கிறது காங்கிரஸ்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் ‘தேசிய மாநாட்டுக் கட்சி’ தனித்தே போட்டியிடும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.

மேலும் எதிர்காலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகளை மறுப்பதற்கும் இல்லை என்கிறார் பரூக் அப்துல்லா.

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.

லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.கவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஆனால் ‘இந்தியா கூட்டணி’ என்ற ஒருமித்த எதிரணியை உருவாக்கிய நிதிஷ்குமாரே இந்த அணியை கைகழுவிவிட்டு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடிவிட்டார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்து விட்டன. இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்குப் போய் விட்டது.

இதனால் ‘இந்தியா கூட்டணி’ என்ற அமைப்பு லோக்சபா தேர்தல் வரை நீடிக்குமா? என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் நகரில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், “லோக்சபா தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறக் கூடும். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டியிடும். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் ‘இந்தியா’ கூட்டணியின் காங்கிரஸுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால்தான் இம்முடிவை எடுத்தோம் என்றார் பரூக் அப்துல்லா.

அத்துடன் இந்தப் பேட்டியின் போதே, எதிர்காலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசிய மாநாட்டு கட்சி இடம்பெறக் கூடும் என்பதையும் சூசகமாக தெரிவித்தார் பரூக் அப்துல்லா. வாஜ்பாய் காலத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஒரிசா ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆளும் பிஜூ ஜனதா தளம் அறிவித்துள்ளது பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரிசாவில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிஷாவின் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் அமர் பட்நாயக், பிரசந்தா, நந்தா, பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரது ராஜ்யசபா எம்.பி பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரலில் முடிவடைவதால் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஒரிசா சட்டசபையில் மொத்தம் 147 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு 111 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.கவுக்கு 22 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். காங்கிரஸ் 8, சி.பி.எம் 1 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரிசா ராஜ்யசபா தேர்தலில் பிஜூ ஜனதா தளத்தின் தேபாஷிஸ் சமந்த்ராய், சுபாஷிஷ் குனிதா ஆகியோர் போட்டியிடுவர் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார்.

ஆனால் 3 ஆவது வேட்பாளரை பிஜூ ஜனதா தளம் நிறுத்தவில்லை. பிஜூ ஜனதா தளத்தின் இந்த நிலைப்பாடு விவாதப் பொருளானது.

தற்போது ஒரிசா ராஜ்யசபா தேர்தலில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என டில்லி பா.ஜ.க மேலிடம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் நலன் கருதி பா.ஜ.க வேட்பாளர் அஸ்வினி வைஷ்ணவ்வை ஆதரிப்பதாக பிஜூ ஜனதா தளம் திடீரென அறிவித்திருப்பது பெரும் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியும் நீண்டகாலம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்தது. பின்னர் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.

அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் பல்வேறு சூழல்களில் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது பிஜூ ஜனதா தளம். ஒரிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளத்துக்கு எதிரான கட்சியாக பா.ஜ.க இருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தமது இருப்பை இழந்து கொண்டிருக்கிறது என்பது நன்றாகவே தெரிகின்றது.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க மேலிடம் தீவிரம் காட்டுகிறது. இந்த பின்னணியில் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் பிஜூ ஜனதா தளம் திரும்புமா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.

இதேவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் அகாலி தளம், தெலுங்குதேசம் மற்றும் அண்ணா தி.மு.கவை மீண்டும் பா.ஜ.க அணிக்கு கொண்டு வருவதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டசபையில் திடீரென அ.தி.மு.க மூத்த தலைவர் தங்கமணியும் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், அ.தி.மு.கவை பா.ஜ.க அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அண்மையில் டெல்லியில் முகாமிட்டு பா.ஜ.க கூட்டணிக்கு திரும்புவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலின் இக்காட்சிகளை வைத்து நோக்கும்போது, நரேந்திர மோடி அரசை எதிர்வரும் தேர்தலில் வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி வெகுவிரைவில் துண்டுதுண்டாகி காணாமல் போய் விடுமென்றே நம்பப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT