Monday, April 29, 2024
Home » தோட்டத் தொழிலாளர்களில் அரசாங்கம் விசேட கவனம்
'அஸ்வெசும' 02ஆம் கட்டம்

தோட்டத் தொழிலாளர்களில் அரசாங்கம் விசேட கவனம்

by sachintha
January 12, 2024 7:27 am 0 comment

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும் வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் மேற்கொள்ளப் படுமென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பெருந்தோட்ட மக்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படுகிறது.வற் வரி 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.ஆனால் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் ஏன் பெருந்தோட்ட மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நிதி இராஜாங்க அமைச்சரிடம் அவர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரவு செலவுத் திட்டத்தின் தீர்மானத்துக்கமைய அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த அதிகரிப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் தற்போதைய பொருளாதார நிலைமை சாதகமாக உள்ளதால் இந்த மாதம் 5,000 ரூபாவை முதல் தவணையாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT