Monday, April 29, 2024
Home » இலங்கை கிரிக்கெட் தடையை பெப்ரவரி 15 இற்குள் நீக்க ICC உறுதி

இலங்கை கிரிக்கெட் தடையை பெப்ரவரி 15 இற்குள் நீக்க ICC உறுதி

by sachintha
January 12, 2024 7:33 am 0 comment

சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் மீதான தடை பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்திருக்கும் ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் அலர்டிஸுடன் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். அலர்டிஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் நேற்று முன்தினம் (10) சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஐ.சி.சி. பிரதிநிதிகள் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் இலங்கை மீதான தடையை அகற்றுவதற்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சியின் அடுத்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளபோதும் “சூம்” தொழில்நுட்பத்தின் மூலம் விசேட நிறைவேற்றுக் குழு கூட்டம் ஒன்றை நடத்தி இலங்கை மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலர்டிஸ் உறுதி அளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் விளையாட்டு சட்டத்தை ஐ.சி.சி. பிரதிநிதிகள் தெரிந்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பெர்னாண்டோ, ஐ.சி.சி. ஒழுக்க விதிகளுக்கு பொருந்தும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டுவரும்படி கோரியதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய விளையாட்டு யாப்பில் திருத்தங்கள் செய்வதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் பெர்னாண்டோ கூறினார்.

புதிய திருத்தத்தின் கீழ் தனது துறைக்கு உட்பட்ட அதிகாரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஐ.சி.சி. வருடாந்த பொதுக் கூட்டம் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஐ.சி.சியினால் இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்ட தடை சுற்றுலாத் துறைக்கு பெறும் இழப்பாக அமைந்ததாகவும் அமைச்சர் பெர்னாண்டோ கூறினார்.

பெப்ரவரி 15 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்காவிட்டால் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. வருடாந்த பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போய்விடும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் பெர்னாண்டோ மேலும் கூறும்போது, இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் கட்டமைப்பு வீரர்களுக்கு அதிக நலன் பயக்கும் வகையில் தற்போதைய உச்ச தேவைக்கு அமைய சீரமைக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.

அரசியல் தலையீட்டை காரணம் காட்டி இலங்கை கிரிக்கெட் மீது ஐ.சி.சி கடந்த நவம்பர் ஆரம்பத்தில் தடை விதித்தது. எனினும் இலங்கை அணி தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு அனுமதித்த ஐ.சி.சி. இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியை தென்னாபிரிக்காவுக்கு மாற்றியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT