Sunday, April 28, 2024
Home » ஈழத்துப் பிராந்திய இலக்கியங்களின் களஞ்சியம் பேராசிரியர் யோகராசா

ஈழத்துப் பிராந்திய இலக்கியங்களின் களஞ்சியம் பேராசிரியர் யோகராசா

by gayan
January 4, 2024 6:00 am 0 comment

இந்த ஆண்டு செ.யோகராசாவின் மறைவோடு அஸ்தமிப்பது துயரமானது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒரே காலத்தில் அறிமுகமான நாங்கள், இருவேறு துறைகள் சார்ந்து எமது கல்வி அமைந்திருந்தபோதும், தமிழ் இலக்கிய ஈடுபாட்டால் மிக நெருக்கமானோம்.

செ.யோகராசா தமிழ்மொழியைச் சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்றவர். நான் பொருளியலைச் சிறப்பாக எடுத்திருந்தேன். தமிழைச் சிறப்பாகப் பயின்று கொண்டிருந்தோருக்கு ‘புனைகதை’ (Fiction)ஒரு பாடமாக அமைந்தது, கலாநிதி க.கைலாசபதி அப்பாடத்தின் விரிவுரையாளராக வந்தபோது, அவரின் விரிவுரைகளை அவ்வாண்டு முழுதும் நான் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். இதனாலும், சித்ரலேகா மெளனகுரு, செ.யோகராசா ஆகியோருடனான எனது உறவு நெருக்கமானது.

யோகராசாவை நான் ஒருபோதும் அந்தப் பெயரில் அழைத்ததில்லை. எனக்கு அவர் யோகன். ‘கருணையோகன்’ என்ற பெயரில் அவர் அப்போதே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தார். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான எங்கள் உறவு அவர் மறையும்வரை தொடர்ந்திருந்தது. என்னைத் தேடி அவர் எனது விடுதிக்கு வருவதும், வெள்ளவத்தையில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அவரை நாடி நான் செல்வதும் வழக்கமானவை.

பல்கலைக்கழகக் கல்வி முடிந்த கையோடு நான் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் ‘தினகரன்’ ஆசிரியர் குழுவில் இணைந்தபோது, யோகன் கறுவாக்காட்டில் தபால் நிலையத்தில் பணியில் அமர்ந்தார். வாசிப்பும் தேடலும் மிக்க யோகனுக்கு ஆசிரியர் பணிமட்டுமே உகந்தது என்பது எனது அபிப்பிராயம். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவர் ஆசிரியரானார். மலையகத்தில் சிலகாலம் அவர் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அவருக்குப் புதியதோர் உலகம் தரிசனமானது. மலையகம் அவர் புகுந்த இடமானது. பின்னர் வடமராட்சியில் சில காலம் ஆசிரியத் தொழிலில் கழிந்தது. இந்தக் காலங்களில் அவர் தனது முதுகலைமாணிப் பட்டத்தையும் கல்வி டிப்ளோமாவையும் முடித்து விட்டிருந்தார்.

பேராசிரியர் சி.மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகத் திகழ்ந்தபோது, யோகன் அங்கு தமிழ் விரிவுரையாளராகப் பதவி பெற்றமை, யோகனின் இலக்கியப் புலமைக்குப் பெருந்தளமிட்டது. மட்டக்களப்பு அவர் மண்ணாகியது. கிழக்கிலங்கையின் இலக்கிய வாசத்தில் அவர் லயித்தார். புதியதலைமுறை எழுத்தாளர்கள் இவரின் முன்னுரைக்கு கியூவில் நின்றனர். கற்றுக்குட்டிகளின் படைப்பிலும் நயம் கண்டு, குறைகளை நோகாமல் சொல்லி, மயிலிறகால் வருடிக்கொடுக்கும் முன்னுரைக்காரராக யோகன் மாறியிருந்தார்.

யோகன் 200 நூல்களுக்கு முன்னுரை கொடுத்திருக்கிறார். அவற்றில், 65 முன்னுரைகள் புதிய எழுத்தாளர்களின் முதற்படைப்புகளுக்கு எழுதப்பட்டவையாகும்.

இலங்கையில் நம் இலக்கிய வாசிப்பிற்குள் வந்து சேராத பல பிராந்தியங்கள், தொழில்முறைகள், சமூக மாற்றங்கள், முரண்பாடுகள் எவ்வளவோ உள்ளன. இவர்களின் வாழ்வியற் கோலங்கள் வேறுபட்டன. தொழில் முறைகள், சமூக உறவுகள், அயலகக் கிராமங்களின் ஊடாட்டங்கள், பொருளாதார முன்னேற்றங்கள், கல்வி வளர்ச்சிகள், அரசியல் நிலைமைகள் என்பன இலக்கியங்களில் இன்னும் போதிய அளவு கொண்டுவரப்படவில்லை.

இத்தகு பிராந்தியங்களில் முகிழ்க்கும் இலக்கிய வெளிச்சங்களை யோகன் அக்கறையோடு அவதானிக்கிறார். இருநூற்றுக்கும் அதிகமாக அவர் எழுதியுள்ள முன்னுரைகள் தொகுக்கப்படும்போது, புதிய இலக்கிய நிலத்தோற்றங்கள் நம் கண்ணில் படும் நல்ல வாய்ப்பு உருவாகும்.

யோகனின் கட்டுரைகள் அளவிற் சிறியன. அனைத்தையும் அவர் bullet points களில் தருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார். கொள்ளையான தவல்கள், விபரங்களைக் கொண்ட கிட்டங்கி அவர்.

யோகனின் நுண்ணிய தேடல்கள், பரந்த வாசிப்பு என்பனவற்றிற்கு அவர் தொகுத்தளித்திருக்கும் ‘ஈழத்து சிறுவர் அறிவியல் பாடல்கள்’, ‘ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு’, ‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’, ‘ஈழத்து முச்சந்தி இலக்கியம்’, ‘ஈழத்துத் தமிழியல்சார் தமிழ் ஆய்விதழ்கள்’ ஆகியன அரும்பெரும் சான்றாகும். ஒரு பெரும் நிறுவனம் மட்டுமே செய்து முடித்திருக்கக்கூடிய பணியினை யோகன் தனியொருவராக நின்று, தேடி, திரட்டி, வகைப்படுத்தி, தொகுத்து இலக்கியக் கருவூலங்களாக நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அத்தகு தேடலும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்ட இன்னொரு ஆய்வாளனை நம் காலத்தில் நாம் இனிக் காண்பதரிது.

இலக்கியமும் வாசிப்புமே யோகனின் மூச்சாக இருந்திருக்கிறது. என்றும் புன்னகை தவழும் முகமும் எளிமையும் எவரையும் புண்படுத்தாத இனிய பாங்கும் மென்மையும் கருணையும் மிகுந்த யோகன் நாம் வாழ்வில் சந்தித்திராத மிகப் பெருஞ் சவால்களை அவர் தன் வாழ்வில் சந்தித்து மீண்டிருக்கிறார் என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான ஆற்றோட்ட வாழ்வாக அவரது வாழ்வு அமைந்திருக்கிறது. உக்கிரமமான மோதல்களும் வன்முறைகளும் அபாயமான சூழலும் உயிராபத்துகளும் இனவெறுப்புகளும் அலைமோதிய ஒரு காலப்பகுதியில், ஒரு சித்தனைப்போல அவர் இலக்கியக் கருமமாக்கியவாறு இருந்திருக்கிறார்.

மு.நித்தியானந்தன்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT