Home » உலகில் 400 மில்லியன் மக்கள் பேசும் மொழியாக அரபு மொழி காணப்படுகிறது

உலகில் 400 மில்லியன் மக்கள் பேசும் மொழியாக அரபு மொழி காணப்படுகிறது

சீனன்கோட்டை அல்ஹுமைஸராவில் இடம்பெற்ற சர்வதேச அரபு மொழி தின நிகழ்வில் அஷ்ஷெய்க் அரபாத் கரீம்

by Gayan Abeykoon
December 29, 2023 7:11 am 0 comment

சர்வதேச அரபு மொழி தின விழா பேருவளை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையில் அதிபர் இப்ராஹீம் தலைமையில் (22) நடைபெற்றது. இந்நிகழ்வில், கௌரவ பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமியா நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி, எம்.ஏ), கல்வி அமைச்சு சர்வதேச அரபு மொழித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த மகத்தான இந்நிகழ்வு மிகுந்த பாராட்டுக்குரிய அம்சமாகும் என்று குறிப்பிட்டார்.

அரபு மொழியின் சிறப்புக்களை அரபு மொழியில் எடுத்துக் கூறிய அவர், அல்-குர்ஆனின் மொழியாக காணப்படும் அரபு மொழி 400 மில்லியனுக்கு அதிகமான மக்கள் பேசும் மொழியாகவும், இருபத்து இரண்டு நாடுகளது முதன்மை மொழியாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட, அதிகம் பேசும் ஆறு மொழிகளில் ஒன்றாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

இம்மொழியை கற்பதன் மூலம் நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இனங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும், தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளவும் பெரிதும் உதவியாக அமையும் என்று குறிப்பிட்ட அவர், கல்வி அமைச்சு அரபு மொழிப் பாடத்தை பாடசாலை கலைத்திட்டத்தில் இணைத்துள்ளமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் கூறினார். இவ்விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திப் பகுதியின் பணிப்பாளர் நிஸாமுதீன், சர்வதேச அரபு தினத்தை இலங்கை அரசு கொண்டாடுவதற்காக மேற்கொண்ட காத்திரமான ஏற்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார்.

இலங்கை முஸ்லிம்களது முதலாவது குடியிருப்பு பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றமை, ஆரம்பப் பள்ளிவாசல் அங்கு அமைக்கப்பட்டமை, பெண்களுக்கான முதலாவது பாடசாலை இப்பிரதேசத்தில் நிறுவப்பட்டமை போன்ற காரணிகள் தேசிய அரபு மொழி தினத்தை பேருவளையில் கொண்டாட தீர்மானித்தமைக்கான காரணிகளாக அமைந்ததாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்கள், சீனன்கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வை.எம்.எம்.ஏ உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் உட்பட களுத்துறை மாவட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

(அஜ்வாத் பாஸி)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT