Sunday, April 28, 2024
Home » மார்கழி மாதத்தில் மகத்துவம் நிறைந்த திருவெம்பாவை வழிபாடு

மார்கழி மாதத்தில் மகத்துவம் நிறைந்த திருவெம்பாவை வழிபாடு

by gayan
December 20, 2023 7:58 am 0 comment

இந்துக்கள் சிவனை நினைத்து வழிபடும் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம் ஆகியன நேற்றுமுன்தினம் 18 ஆம் திகதி அதிகாலை ஆரம்பமாகின. தொடர்ந்து 10 தினங்கள் திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இறுதித் தினமான பத்தாம் நாள் (27.12.2023) செவ்வாய்க்கிழமை திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் திருவெம்பாவை நோன்பு நிறைவடைகிறது.

இக்காலத்தில் பிரம்ம முகூர்த்த வேளையாம் அதிகாலை 4 மணி தொடக்கம் -6 மணி வரையான நேரத்தில் பக்தர்கள் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன், ஊர்வலத்திலும் கலந்து கொள்கின்றனர்.

‘மாதங்களில் நான் மார்கழி’ என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.

அவ்வாறான சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு இருந்தால் மனதிற்குப் பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அதிகாலை எழுந்து நீராடி வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பதால் இறைவன் அருள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்ைக.

மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெருமழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான். பகவத்கீதை பிறந்ததும் இந்த மாதத்தில்தான்.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் மாதம் இது. ஆண்டாளின் பாசுரங்களை தியானித்து பலனை அடையலாமென்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்ைகயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT