Saturday, April 27, 2024
Home » வடமத்திய மாகாணத்தில் கால்நடை வளத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம்!

வடமத்திய மாகாணத்தில் கால்நடை வளத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம்!

by damith
December 5, 2023 10:23 am 0 comment

வடமத்திய மாகாணத்தில் இருந்து ஒரு வாரத்தில் மூன்று கொள்கலன்கள் நிரம்பிய மாட்டிறைச்சி வெளிமாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் காரணமாக வடமத்திய மாகாணத்தில் கால்நடை வளம் குறைந்து கொண்டு செல்கின்றது. எனவே இம்மாகாணத்தில் கால்நடைகள் வளத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணசபை கூட்ட மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

பசும்பால் அதிகமாக உற்பத்தி செய்வதில் அனுராதபுரம் மாவட்டம் முதன்மை இடத்தை வகிப்பதாக ஆளுநர் தெரிவித்ததுடன், “குழந்தைகளுக்கான பால்மா மற்றும் ஏனைய பால்மா வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் எமது நாட்டுக்கு பாரிய நிதி செலவாகின்றது. அதனால் உயர்தர பசும்பால் உற்பத்தி செய்வதன் மூலம் மக்களின் போஷாக்குத்தன்மையை மேம்படுத்த முடியும். நாட்டின் பணமும் சேமிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார்.

“கால்நடை வளம் அழிக்கப்பட்டு வருவதாக சமீப காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனவே இம்மாகாணத்தில் கால்நடை வளத்தை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கையும் தீர்மானமும் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் உரிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி, பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பில் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் கால்நடைகளிலேயே தங்கியுள்ளது. இந்த கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி உண்ணும் போது அந்தப் பண்ணையாளர்கள் எவ்வாறு வாழ்வது? வடமத்திய மாகாணத்தில் 275,000 கால்நடைகள் உள்ளன. வருடத்திற்கு 100,000 கன்றுகள் ஈன்றெடுக்கப்பட்டாலும், கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென்று கூற முடியாது. காரணம் வருடத்திற்கு 75,000 கால்நடைகள் கொல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.

வாரத்தில் மூன்று கொள்கலன்கள் அளவில் இறைச்சி மாகாணத்திற்கு வெளியில் கொண்டுசெல்லப்படுதாகத் தெரியவந்துள்ளது. அவை சட்டபூர்வமற்ற முறையிலான இறைச்சி எனவும் மாகாண எல்லைக்குள் மாத்திரம் இறைச்சியைக் கொண்டு செல்ல முடியும். மாகாணத்திற்கு வெளியில் இறைச்சி கொண்டு செல்லப்படுவது சட்டவிரோதம்” எனவும் ஆளுநர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 27 மாடறுக்கும் மடுவங்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 05 மாடறுக்கும் மடுவங்களுமாக 32 கூடங்கள் உள்ளன. சட்டபூர்வமாக கால்நடைகளை இறைச்சிக்கு அறுப்பதைத் தவிர, திருட்டுத்தனமாக கால்நடைகள் அறுக்கப்பட்டு மேல்மாகாணம் உள்ளிட்ட பல வெளிமாகாணங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

மதார் தம்பி ஆரிப் (அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT