Monday, April 29, 2024
Home » இலங்கை-சவூதி இராஜதந்திர உறவு வலுவடைவதில் தூதுவர் காலித் அல் கஹ்தானி ஆற்றுகின்ற பங்களிப்பு

இலங்கை-சவூதி இராஜதந்திர உறவு வலுவடைவதில் தூதுவர் காலித் அல் கஹ்தானி ஆற்றுகின்ற பங்களிப்பு

by damith
December 5, 2023 6:00 am 0 comment

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால வரலாற்று கலாசார உறவுகள் இருந்தாலும், இராஜதந்திர ரீதியான உறவுகள் 1974 இலேயே ஆரம்பிக்கப்பட்டன. அன்றுமுதல் சுமார் 49 வருடங்களாக இரு நாடுகளும் நட்பு நாடுகளாகவே வலம்வருகின்றன.

இந்த இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல முயற்சிகளை செய்து வருகின்றார் தற்போதைய இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலிதுல் கஹ்தானி.

1975 இல் ரியாத்தில் பிறந்த தூதுவர் 1997 ஆம் ஆண்டு மன்னர் சுஊத் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத்தில் கலைமாணி பட்டத்தையும், அதே துறையில் 2006 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரியா பல்கலையில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் இராஜதந்திர கற்கைகளுக்கான இளவரசர் சுஊதுல் பைசல் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்து இராஜதந்திர ரீதியான ஆளுமைப் பண்புகளை தனக்குள் உருவாக்கிக் கொண்டார்.

அரபு, ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளிலும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்விப் பயணத்தில் தன்னை செதுக்கிக் கொண்ட அவர் தூரநோக்கு, பரந்து விரிந்த சிந்தனை, துல்லியமான செயற்திட்டம், விவேகத்துடனான வேகம் போன்ற பண்புகள் மூலம் நிர்வாக ரீதியாகவும் தன்னை வளர்த்துக் கொண்டார்.சவூதி வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்களுக்கான பிரிவில் நான்கு வருடங்கள் கடமையாற்றியதைத் தொடர்ந்து அலெக்ஸாண்டிரியாவில் உள்ள சவூதி அரேபியாவின் துணைத் தூதரகம், பிலிப்பைன்ஸ், கனடா போன்ற நாடுகளிலுள்ள சவூதி அரேபிய தூதரகங்கள் போன்றவற்றில் பணியாற்றிய இராஜதந்திர அனுபவங்களுடன் கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் போன்றோருடன் அவர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சந்திப்புக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அவர் தனது இராஜதந்திர நடவடிக்கைகள், நகர்வுகள் மூலம் குறுகிய காலத்துக்குள் இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம், திணைக்கள உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் போன்றோரிடம் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகின்றார். அண்மையில் தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (SLIIT) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தூதுவர் கலந்து சிறப்பித்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அவரது வருகையின் பின்னரான மிகக்குறுகிய காலத்திற்குள் சவூதியின் மிக முக்கியமான தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அமைச்சர்கள், வான்படை அதிகாரிகள், சவூதி அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என பலரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அதுமட்டுமன்றி சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு இலங்கையில் தேசிய ரீதியில் நடத்திய முதலாவது மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டியும் இவரது காலத்தில், இவரது தலைமையில் நடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையில் வலுவான சமூக,பொருளாதார, உறவுகள் வலுப்பெறுவதில் தூதுவரின் வகிபாகம் நிச்சயம் தாக்கம் செலுத்தும்.

அபூ அரீஜ் பாஹிர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT